Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாகிஸ்தான் எல்லாம் 2ம் நிலை பிரச்னை; சீனாவை முதன்மை எதிரியாக பார்க்கும் இந்தியா: அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட பகீர் தகவல்

வாஷிங்டன்: பாகிஸ்தான் எல்லாம் இந்தியாவிற்கு 2ம் நிலை பிரச்னையாக உள்ளது. ஆனால் சீனாவை முதன்மை எதிரியாக இந்தியா பார்ப்பதாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை, சமீபத்தில் இந்தாண்டுக்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியா தன்னுடைய முதன்மை எதிரியாக சீனாவை கருதுகிறது, அதேநேரம் பாகிஸ்தானை இரண்டாம் நிலை பாதுகாப்பு பிரச்னையாக பார்க்கிறது. இந்திய பிரதமர் மோடியின் பாதுகாப்பு முன்னுரிமைகள், உலகளாவிய தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும் சீனாவை எதிர்கொள்வது மற்றும் இந்தியாவின் ராணுவ வலிமையை மேம்படுத்துவது ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்துகிறார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லை மோதல்கள் நடந்தபோதிலும், பாகிஸ்தானை கட்டுப்படுத்த வேண்டிய பிரச்னையாகவே கருதுகிறது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத உள்கட்டமைப்புகளை இந்தியா ஏவுகணைகள் அழித்தன. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் குவாட், பிரிக்ஸ், ஆசியன் போன்ற அமைப்புகளுடன் கூட்டாண்மை அமைத்து, அந்நாடுகளுடன் ராணுவ பயிற்சிகள், ஆயுத விற்பனை, பயிற்சி திட்டங்கள் மற்றும் தகவல் பகிர்வு திட்டங்களுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது.

மேலும், இந்தியா-சீன எல்லைப் பிரச்னையில், 2024 அக்டோபரில் இரு தரப்பு படைகளும் லடாக்கில் உள்ள மோதல் பகுதிகளில் இருந்து விலகுவதற்கு உடன்பாடு செய்தபோதிலும், எல்லைப் பிரச்னை முழுமையாக தீர்க்கப்படவில்லை. அதேநேரம் பாகிஸ்தானை பொருத்தமட்டில், இந்தியாவை அச்சுறுத்தல் நாடாகவே பார்க்கிறது. இந்தியாவின் ராணுவ மேம்பாட்டிற்கு எதிராக, அணு ஆயுதங்களை உருவாக்குவது, ராணுவத்தை நவீனமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.