35,000 அடி உயரத்திலிருந்து ஏவுகணை போல கீழ் நோக்கி பாய்ந்து விழுந்து நொறுங்கிய விமானம்.! வெடித்து சிதறி 9 பேர் பலி
ஃப்ளோரிடா: அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் குடியிருப்புப் பகுதியில் வணிக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த ஒன்பது பேரும் உயிரிழந்துள்ளனர். பெரிய பணக்காரர்கள் வசிக்கும் பாம் பீச் கவுண்டி பகுதியில் உள்ள, அதிபர் டொனால்ட் டிரம்பின் ஓய்வு விடுதியான மார்-அ-லாகோவிலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிரெஸ்ட்ஹேவன் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.
மேலிருந்து கீழே ஏவுகணை போல விமானம் விழுந்த ஜெட் விமானம் வெடித்து தீப்பிடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. டெக்சாஸின் ஆஸ்டின் நகரில் இருந்து பஹாமாஸ் நோக்கிச் சென்ற லியர்ஜெட் 60 (Learjet 60) என்ற சிறிய ரக விமானம், கிரெஸ்ட்ஹேவன் பகுதிக்கு அருகே சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, மோசமான வானிலை மற்றும் பனிப்பொழிவு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, மிக அதிவேகமாக கீழ்நோக்கி பாய்ந்து தரையில் மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட விமானம் குடியிருப்புப் பகுதிக்கு அருகே விழுந்து பெரும் தீப்பிழம்பு போல வெடித்த போதிலும், அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்துவிட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


