Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விவசாயிகளை, கிராமப்புற பொருளாதாரத்தை, நடுத்தர மக்களை பாதிக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகள் மீது மறுபரிசீலனை: ஒன்றிய நிதியமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: விவசாயிகள், நடுத்தர மக்கள், கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கும் நகைக்கடன் கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிய நிதியமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குவதற்கு 9 வழிகாட்டு வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. நகைக்கடன் வாங்குபவர், அடமானம் வைக்கும் நகை தனக்குத்தான் சொந்தம் என்ற ஆவணத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும், 22 கேரட் அடிப்படையில் மட்டுமே நகைகளின் மதிப்பை கணக்கிடவேண்டும், நகை மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும்.

தங்கக் காசாக இருந்தால் 50 கிராமுக்கு மேல் அடமானம் வைக்க முடியாது ஆகியவை 9 கட்டுப்பாடுகளில் முக்கியமானவை. நடுத்தர மக்கள், விவசாயிகள் உட்பட பலர் அவசரத்தேவைக்கு நகைக்கடனைத்தான் நம்பியிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய கெடுபிடி விதிமுறைகள் சாமானிய மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடு முழுவதும் பல தரப்பில் இருந்தும் இந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை பாதிக்கும் இந்த கடுமையான கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதை தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் கவலை அளிக்கின்றன.

தங்கத்தை பிணையாக பெற்று வழங்கப்படும் கடன்கள் சரியான நேரத்தில், குறுகிய கால பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள், பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் மீன்வளம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த வரைவு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிப்படையக்கூடும். அதனால் தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் கிராமப்புற கடன் விநியோக முறைக்கு கடுமையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முறையான நில உரிமைகள் அல்லது சரிபார்க்கக்கூடிய வருமான ஆவணங்கள் இல்லை. அத்தகைய விவசாயிகள் தங்கள் வீட்டு தங்கத்தை அடகு வைத்து வங்கி கடன்களை பெறுவதற்கான ஒரு சாத்தியமான மற்றும் கண்ணியமான வழியாக நகைக்கடன் உள்ளது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள நெறிமுறைகள் எளிதாக கடன் பெறும் வழியை நேரடியாக குறைப்பதோடு, கடன் வாங்குபவர்கள் பெரும்பாலானோரை முறையான கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை நாடுவதையும் குறைத்துவிடும்.

நகைக்கடன் பெறும் எளிமையான வழிமுறைகள் கட்டுப்படுத்தப்படுவதால், கிராமப்புறங்களில் கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை நோக்கிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது அவர்களை சுரண்டல் நடைமுறைகளுக்கு ஆளாக்குவதுடன் கடனை அதிகரிக்கும் மற்றும் முறையான நிதி சேர்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தடுக்கும்.

மேலும், கடன் வழங்குபவர்கள் மற்றும் கடன் வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக, சிறிய அளவிலான விவசாய கடன்களுக்கு கடன் பெறும் திறனை ஆவணமாக மதிப்பீடு செய்யும் முறையானது கிராமப்புறச் சூழலில் செயல்படுத்த முடியாததாக இருக்க வாய்ப்புள்ளது. இது கடன் வழங்கும் நடைமுறையில் தடைகளை உருவாக்கலாம். இந்த வரைவு நெறிமுறைகள் கடன்களை தவறான வகைப்படுத்தலுக்கு வழிசெய்வதுடன், தணிக்கை தடைகளுக்கும் காரணமாக அமைந்து அதன் காரணமாக வங்கி மற்றும் கடனாளி இரு தரப்பினருக்கும் பொறுப்பு அதிகரிக்க கூடும்.

எனவே, மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி (தங்க பிணையத்திற்கு எதிராக கடன் வழங்குதல்) வழிகாட்டுதல்கள் 2025-ல் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய இந்திய ரிசர்வ் வங்கிக்கு நிதி அமைச்சர் அறிவுறுத்த வேண்டும். நடைமுறையில் உள்ள கிராமப்புற கடன் வழங்குதலை அங்கீகரிக்கும் விதமாக, ரூ.2 லட்சம் வரையிலான விவசாய மற்றும் விவசாயம் தொடர்புடைய கடன்களுக்கு தங்கத்தை பிணையமாக தொடர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

கடன் கோருபவர்களின் நிதி அணுகலை பாதுகாக்கும் அதே வேளையில் கடன் பெறும் அளவினை மதிப்பிட ஒரு சமநிலையான ஒழுங்குமுறை மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றுதான் கருதுகிறேன். எனவே, விவசாய சமூகத்திற்கும் கிராமப்புற பொருளாதாரத்திற்கும் அத்தியாவசியமான இந்த விவகாரத்தில் ஒன்றிய நிதியமைச்சர் கவனம் செலுத்தி தீர்வுகாண வேண்டும். இவ்வாறு முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார். இதே கருத்தை வலியுறுத்தி இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

* மக்களை கொடூர வட்டி வலையில் சிக்க வைப்பது ஏற்புடையதல்ல

தங்க நகைக்கடன் பெறுவதற்கான விதிமுறைகளை தளர்த்துவது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கையில் இருப்பது அரையணா காசாக இருந்தாலும், அதை சேர்த்து வைத்து, குண்டுமணி தங்கமாவது வாங்குவது நம் மக்களின் இயல்பு. இந்த தங்கம் ஆடம்பரத்துக்கான தங்கமல்ல; ஆத்திர அவசரத்திற்கான தங்கம்.

தங்க நகைகளை வங்கிகளில் வைத்து கண்ணியமான முறையில் கடன் பெறுவதற்கு இடையூறாக, தேவையற்ற கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி முன்மொழிந்திருப்பது, நம் நாட்டின் ஏழை - எளிய, நடுத்தர மக்களின் பொருளாதாரத்திற்கும் கண்ணியத்திற்கும் விடப்பட்டிருக்கும் சவால்.

ஏற்கனவே அநியாய வட்டிக்கு கடன் வாங்கி கடன் சுறாக்களிடம் சிக்கி அவதியுறும், அவசர தேவைகளுக்காக கடன் ஆப்ஸ்கள் மூலம் கடன் பெற்றுச் சொல்லொணாத் துயருக்கும் ஆளாகியிருக்கும் மக்களை காப்பாற்ற சிந்திப்பதை விட்டுவிட்டு, அந்த கொடூர வட்டி வலையில் சிக்க வைத்திடும் செயல்களை செய்வது ஏற்புடையதல்ல.

எனவே, தங்க நகைக்கடன் பெறுவதற்கான விதிமுறைகளை தளர்த்தி, ஏழை - எளிய, நடுத்தர மக்கள் கண்ணியத்துடன் வாழ உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.