Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு: துணை ராணுவம் பாதுகாப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (5ம் தேதி) காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளராக சீதாலட்சுமி உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர். இறுதி பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. கிழக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 237 வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்திட ‘பேலட் சீட்’ பொருத்தப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள 850 மின்னணு வாக்குபதிவு (இவிஎம்) இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 விவிபேட் மற்றும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய 85 வகையான பொருட்கள் இன்று காலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரத்யேக வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன.

வாக்குப்பதிவானது நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 237 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் 300 பேர், பட்டாலியன் போலீசார் 450 பேர், ஆயுதப்படை போலீசார் 250 பேர், சட்டம் ஒழுங்கு போலீசார் 1,678 பேர் என மொத்தம் 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.