Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

121.37 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9011 கோடியில் 71 குடிநீர் திட்டங்கள்: நாளொன்றுக்கு 751.56 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர்

சென்னை: 4 மாநகராட்சிகள், 13 நகராட்சிகள், 49 பேரூராட்சிகள், 10,565 ஊரக குடியிருப்புகளில் 121.37 லட்சம் மக்கள் பயன்பெறும் ரூ.9011.45 கோடியில் 71 குடிநீர்த் திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபின் நிறைவேற்றிவரும் வீட்டு வசதித் திட்டங்கள், சாலை வசதிகள், குடிநீர்த் திட்டங்கள் முதலான பல அடிப்படை வசதிகள் காரணமாக தமிழ்நாடு விரைந்து நகர்மயமாகி வருகிறது. ஊராட்சிகள் பேரூராட்சிகளாவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாவும் வளர்ச்சி பெறுகின்றன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், நமக்கு நாமே திட்டத்தில், ரூ.582 கோடி ஒதுக்கீட்டிலும், பொதுமக்கள் பங்களிப்பு 183.56 கோடியும் சேர்ந்து பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

நகர்ப்புர வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி பெறப்பட்டு இதுவரை 2,04,860 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு 12,71,006 மனித நாட்கள் பெறப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மைக்கான செயல் திட்டத்தின் கீழ், 42,225 தனிநபர் வீட்டுக் கழிப்பறைகள், 545 பொது கழிப்பறைகள், 614 சிறுநீர் கழிக்கும் இடங்கள், 154 நுண் உரக்கூடங்கள் 561 பொருள் மீட்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேம்பாட்டுப் பணிகள்

நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் இதுவரை அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 3 கட்டங்களில் ரூ.6,655.80 கோடி மதிப்பீட்டில் 446 பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர்ப் பணிகள், பூங்கா மேம்பாடு மற்றும் நீர் நிலைகள் புனரமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 11 மாநகராட்சிகள் ரூ.10,639.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. பொன்னேரி, குன்றத்தூர்உள்பட 7 நகராட்சிகளில் சிறப்பு நிதியின் கீழ் ரூ.10.46 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, வணிக வளாகக் கட்டடம், சமுதாய நலக்கூடம், திருமண மண்டபம் ஆகியவை கட்டப்படுகின்றன.

அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 14 மாநகராட்சிகளில் ரூ.3,360.64 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. மாநகராட்சிகளில் ரூ.102.30 கோடியில் 231 புதிய வகுப்பறைகளும், நகராட்சிகளில் ரூ.118.80 கோடியில் 281 புதிய வகுப்பறைகளும் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 176 பணிகள் முடிவடைந்து மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. மேலும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மொத்தம் 905 வகுப்பறைகள் ரூ. 132.66 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

மழைநீர் வடிகால்கள் சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு 109.094 கி.மீ. நீளத்திற்கு ரூ.270.83 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளன. அனைத்து வகையான நகர்ப்புரச் சேவைகளையும் குடிமக்கள் தங்கள் இல்லங்களிலேயே பெற உறுதிப்படுத்தும் வகையில், ‘நமது சேவையில் நகராட்சி, மக்கள் சேவையில் மாநகராட்சி என்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நகராட்சி நிருவாகத்தில் மின் ஆளுகை மூலம் பணிகளைக் கையாள்வதற்கு, ‘‘மையப்படுத்தப்பட்ட வலைதள மின் ஆளுகை பயன்பாடு என்ற சீரிய திட்டம் ரூ.18.31 கோடியில் செயல்படுத்தப்பட்டு, 24 மாநகராட்சிகள் மற்றும் 134 நகராட்சிகளில் அனைத்து மின் ஆளுகை சேவைகளும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. கையடக்க சாதனம் மூலம் வரிவசூல் பணிகள் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இதற்கான ரசீதுகள் பதிவுசெய்யப்பட்ட கைபேசி எண்ணிற்க்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன.

மக்களுடன் முதல்வர் திட்டம்

24 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்பட்டு. மாநகராட்சிகளில் இதுவரை பெறப்பட்ட 10,283 மனுக்களில் 99.97% மனுக்களுக்கும், நகராட்சிகளில் பெறப்பட்ட 34,385 மனுக்களில் 99.91% மனுக்களுக்கும் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் மாநகராட்சிகளில் இதுவரை பெறப்பட்ட 46,241 மனுக்களில் 98.3% மனுக்களுக்கும், நகராட்சிகளில் பெறப்பட்ட 85,464 மனுக்களில் 97.4% மனுக்களுக்கும் தீர்வுகள் காணப்பட்டுள்ளன.

ரூ.3057.74 கோடியில் நிறைவேற்றப்பட்ட சாலைப் பணிகள் நபார்டு நிதி, டார்மான்ட் நிதி, மூலதன மான்ய நிதி, தமிழ்நாடு நகர்ப்புர சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம், சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மாநில நிதிக்குழு திட்டம் ஆகியவற்றின் மூலம் 8065 சாலைப் பணிகள், 3057.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 15வது நிதி ஆணைய மானியத் திட்டத்தின் கீழ் ரூ.121.30 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 213 தேசிய சுகாதார மையப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ், 36,581 தனிநபர் வீட்டுக் கழிப்பறைகள், 378 சமுதாய கழிப்பறைகள் 50 பொது கழிப்பறைகள், 185 சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் விருதுகள்

சிறப்பாகச் செயல்பட்ட கருங்குழி, கன்னியாகுமரி, விக்கிரவாண்டி, ஆலங்குடி, சோழவந்தான், சூலூர், எஸ். கண்ணனூர், கல்லிடைக் குறிச்சி ஆகிய பேரூராட்சிகளுக்கு முதலமைச்சர் விருதும். கீழ்வேளூர் பேரூராட்சிக்கு ஸ்வச் ஸ்வரகூன் விருதும் வழங்கிப் பாராட்டப்பட்டன.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்:

சென்னைக் குடிநீர் வாரியத்தின் சார்பில், கடந்த 43 ஆண்டுகளில் முதல் முறையாக நாளொன்றுக்கு சராசரியாக 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் விநியோகிக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவ மழையின்போது தேங்கியிருந்த மழைநீரை விரைந்து வெளியேற்றுவதற்கு 73 நீர் உறிஞ்சும் வாகனங்களும், கழிவுநீர்க் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைச் சரி செய்ய 191 ஜெட்ராடிங் இயந்திரங்களும், 45 உறிஞ்சும் திறன் உடைய ஜெட்ராடிங் இயந்திரங்களும், 299 தூர்வாரும் ஆட்டோக்களும் பயன்படுத்தப்பட்டு 2,000 களப்பணியாளர்களைக் கொண்டு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பெருநகரச் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட இடையன்சாவடி, சடையன்குப்பம், கடப்பாக்கம், மாத்தூர், ஜல்லடியான்பேட்டை, ஆலந்தூர், புழல், புத்தகரம், சூரப்பட்டு, கதிர்வேடு, வளசரவாக்கம் மண்டலம், ஆலந்தூர் மண்டலம், சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ.584 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்ட பணிகளையும் மற்றும் ரூ.1043 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் - கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளையும் திறந்து வைத்தார்கள். இத்திட்டங்களால் 40 இலட்சத்து 3 ஆயிரம் குடிமக்கள் பயன் அடைந்துள்ளனர்.

மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் அதனை சார்ந்த பணிகள் ரூ.1,516.82 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தினால் 9 லட்சம் குடிமக்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.

துணை முதலமைச்சர் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பிலுள்ள 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு 400 மி.மீ. விட்டமுள்ள பிரத்தியேக நெகிழிரும்பு குடிநீர் குழாய் அமைக்கும் திட்டம், அம்பத்தூர் மண்டலத்தில் படவேட்டம்மன் எஸ்டேட், சிவானந்தா நகர், எம். கே. பி. நகர், அன்னை சத்தியா நகர் பகுதிகளிலுள்ள விடுபட்ட தெருக்களுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் முதலியவற்றைத் தொடங்கி வைத்தார்கள். ரூ.431 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களால் 19 லட்சத்து 94 ஆயிரத்து 399 மக்கள் பயன்பெறுகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றுதல் : தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தைத் தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு 6.12.2024 அன்று 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கி அவர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்தினார்கள்.

ரூ.4,198.91 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ரூ.6829 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடர்பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்கள் குறை தீர்க்கும் பணி

“முதல்வரின் முகவரி” திட்டத்தின்கீழ், 18.3.2025 வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 19,364 மனுக்களில் 18,131 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, எஞ்சிய மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ், பெறப்பட்ட 1,173 மனுக்கள் மீது தீர்வுகள் காணப்பட்டு, பொது மக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

4 மாநகராட்சிகள், 13 நகராட்சிகள், 49 பேரூராட்சிகள், 10,565 ஊரகக் குடியிருப்புகளுக்கான 71 குடிநீர்த் திட்டங்கள் நாளொன்றுக்கு 751.56 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் ரூ.9,011.45 கோடி திட்ட மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் மூலம் 121.37 இலட்சம் மக்கள் பயன் பெறுகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் இத்தகைய மாபெரும் திட்டங்களால் தமிழ்நாடு அதிவேகமாக நகரமாயமாகி இந்தியத் திருநாட்டில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

தமிழ்நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கி நிறைவேற்றித் தருவதில் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இதர மாநிலங்களுக்கும் வழிகாட்டத்தக்கவையாக அமைந்து பத்திரிகைகளாலும், ஊடகங்களாலும் பாராட்டப்படுவதை நம்மால் அன்றாடம் காண முடிகிறது என்பதே உண்மையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.