தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் இருந்து நேற்று 4,059 பேருந்துகளில் 2,31,363 பேர் பயணம்.! இன்று 5,617 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி நேற்று சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 4,059 சிறப்பு பேருந்துகளில் 2,31,363 பேர் பயணம் செய்தனர். இன்றைய தினம் 5,617 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை, படிப்பு நிமித்தமாக தங்கியிருக்கும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு கூடுதாலாக 4,900 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 369 பேருந்துகள் என மொத்தம் 2,461 சிறப்பு பேருந்துகளில் 1,10,475 பேர் பயணம் செய்தனர். நேற்று சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,967 பேருந்துகள் என மொத்தம் 4,059 சிறப்பு பேருந்துகளில் 2,31,363 பேர் பயணம் செய்தனர். கடந்த 2 நாட்களில் தமிழக அரசு சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 3,41,838 பேர் பயணம் செய்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று மதியம் முதல் நள்ளிரவு 12 மணி வரை 3 பேருந்து நிலையங்களுக்கு மக்கள் வந்த வண்ணமாக இருந்தனர்.
போக்குவரத்து துறை சார்பில் பயணிகளுக்கு உதவும் வகையில் உதவி மையங்களும், கட்டுப்பாட்டு அறைகளும், முன்பதிவு செய்ய ஏதுவாக மையம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பண்டிகை தினத்தையொட்டி ஏராளமான மக்கள் சொந்த ஊர் சென்றதால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன. இந்த நிலையில் இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் தினசரி இயங்கும் 2,092 பேருந்துகள், கூடுதலாக 2,075 மற்றும் பிற பகுதிகளில் இருந்து 1,450 பேருந்துகள் என ஒட்டுமொத்தமாக 5,617 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, இன்றைய தினம் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

