சென்னை: முரசு புயல் காரணமாக இன்று மாலை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மைய இயக்குனர் துரை தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்துள்ள அவர் முரசு புயல் காரணமாக இன்று மாலை முதல் நாளை காலை வரை காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்றார். வடகடலோர பகுதிகளில் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
முரசு புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இந்த புயல் கரையை கடக்கும் போது வட மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும் என்றார். முரசு புயலை தொடர்ந்து அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் புயலாக உருமாறி தமிழ்நாட்டை நோக்கி வரும் என்றார்.
குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவில் தாழ்வு மண்டலங்கள் உருவாகும். நவம்பர் 15-ஆம் தேதி வாக்கில் புயல் உருவாகி தமிழ்நாட்டை நோக்கி வரும். மேலும் தீபாவளியின் போது தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் வானிலை மைய இயக்குனர் துரை குறிப்பிட்டார்.


