Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

பாரிஸ் டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். முதல் சுற்றிலேயே 88.16 மீட்டர் தூரம் எறிந்த நீரஜ், இறுதி சுற்றில் 82.89 மீட்டர் தூரம் எரிந்து முதலிடத்தை பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பாரிஸ் நகரில் நடைபெற்ற 2025 டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா முதல் இடத்தைப் பிடித்து, தனது இந்த சீசனை ஒரு அதிரடி வெற்றியுடன் தொடங்கியுள்ளார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியிலேயே 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையான 90.23 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்திருந்தார். மேலும் 90 மீட்டர் தூரத்தைத் தாண்டிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் பெற்றார்.

ஆனால் அப்போட்டியில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து நீரஜ் சாதனையை முறியடித்து முதல் இடத்தைப் பிடித்தார். பின்னர் பிறகு போலந்தில் நடந்த ஜானஸ் குசோசின்ஸ்கி நினைவுப் போட்டியிலும் ஜூலியன், நீரஜ் சோப்ராவை விட சிறந்த தூரம் எறிந்து முதலிடம் பிடித்திருந்தார். இந்நிலையில் பாரிஸ் போட்டியில் நீரஜ், மீண்டும் ஜூலியன் வெபருடன் மோதினார். ஜூலியன் வெபர் தனது முதல் முயற்சியில் 87.88 மீட்டர் தூரம் எறிந்தார். ஆனால், நீரஜ் 88.16 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார்.

நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் 88.16 மீட்டர் எறிந்த பிறகு, தனது இரண்டாவது முயற்சியில் 85.10 மீட்டர் எறிந்தார். கடைசி முயற்சியில் 82.89 மீட்டர் தூரம் எறிந்தார். ஜூலியன் வெபர் 87.88 மீட்டர், 86.20 மீட்டர். 82.03 மீட்டர். 83.13 மீட்டர். 84.50 மீட்டர் மற்றும் 81.08 மீட்டர் என சீரான தூரங்களை எறிந்தாலும், நீரஜின் முதல் முயற்சி தூரம் அவருக்குக் கை கொடுக்கவில்லை. இதனால் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸ் டைமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா மீண்டும் பட்டம் வென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக, இது அவரது 5வது டைமண்ட் லீக் வெற்றியாகும். 2017ம் ஆண்டில் ஜூனியர் உலக சாம்பியனாக பாரிஸ் டைமண்ட் லீக்கில் பங்கேற்றபோது 5வது இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ரா, தற்போது உலகின் தலைசிறந்த ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.