Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன்?.. ஐகோர்ட் கேள்வி

சென்னை: சென்னையில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனுமதின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப்.28க்குள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் 100% அகற்றப்பட்டுள்ளது.

10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 90%க்கும் மேல் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், சென்னையில் 31% கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சென்னையில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? சாலை நடுவில் உள்ள தடுப்புகளில் கொடிக்கம்பம் நட ஏன் அரசு அனுமதி அளிக்கிறது.

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை முழுமையாக அகற்றாத ஆட்சியர்களை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடித்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; பொது இடங்களில் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு வாடகை வசூலிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், மற்ற இடங்களில் கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றுவது குறித்தும் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யவும் 4 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் உத்தரவை அமல்படுத்துவதற்கு ஜூலை 24ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.