Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பவள விழா கண்ட இயக்கம் திமுக.. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தோன்றியது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!!

சென்னை: நாம் தமிழர் கட்சி உட்பட மாற்றுக் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியினர் உட்பட மாற்றுக் கட்சியினர் சுமார் 3000பேர் இன்று திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்த நா.த.க.வினர், பெரியார் சிலையை நினைவுப் பரிசாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழங்கினர். திமுகவில் இணைந்தவர்களுக்கு கட்சி துண்டு கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; மாற்றுக்கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்,

பவள விழா கண்ட இயக்கம் திமுக: முதலமைச்சர்

பவள விழா கண்ட இயக்கம் திமுக. திமுக என்பது நேற்று முளைத்த காளான் அல்ல, 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற நோக்கத்துக்காக தோன்றியது திமுக. ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமென நினைக்கின்றனர். 1957-ல் திமுக போட்டியிட்ட முதல் தேர்தலில் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றனர். மக்களுக்கு பணியாற்ற, ஏழைகளுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற உணர்வோடு தொடங்கப்பட்டது திமுக.

கட்சி தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வர நினைக்கின்றனர்: முதலமைச்சர்

கட்சி தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்று இன்று சிலர் கூறி வருகின்றனர். வேடமிட்டுக் கொண்டிருப்பவர்களை எல்லாம் அடையாளம் காட்ட விரும்பவில்லை. கட்சி தொடங்கிய உடன் அடுத்து எங்கள் ஆட்சிதான் என்று சிலர் கூறுகின்றனர். திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு ஆவேசம் வருகிறது. திராவிடம் என்ற சொல்லுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார்.

ஆளுநரை மாற்ற வேண்டாம்: மோடிக்கு முதல்வர் கோரிக்கை

ஆளுநர் ரவியை தயவுசெய்து மாற்றிவிட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். திராவிடத்துக்கு எதிராக பேசுபவர்கள் தொடர்ந்து பேசட்டும், மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள். திராவிடத்துக்கு எதிராக பேசுபவர்களை கண்டு திமுகவினர் கவலைப்பட தேவையில்லை. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்துக்கும் ஆளுநர் வர வேண்டும், உரையை படிக்காமல் அவர் புறக்கணிக்க வேண்டும் என முதல்வர் கூறினார்.

7-வது முறையாக திமுக ஆட்சி: முதலமைச்சர் உறுதி

திமுக அரசால் தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்கள் ஏதாவது ஒரு வகையில் பயனடைகின்றன. 7-வது முறையாக திமுக தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும், மகளிர் உரிமைத் தொகையில் உள்ள குறைபாடுகள் ஓரிரு மாதங்களில் தீர்த்து வைக்கப்படும் என உதயநிதி கூறியுள்ளார். காலை உணவு திட்டத்தை இந்தியாவில் பல மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளும் செயல்படுத்தி வருகின்றன. திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் நினைவுபடுத்தினாலே தேர்தலில் 234 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.