Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். வழக்கின் முக்கிய விவரமானது தமிழகத்தில் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் பல்வேறு பொருளாதாரம் சமூக சூழல்கள் கணக்கெடுக்க முடியாத சூழலில் உள்ளது. தமிழகத்தில் உடனே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மாநில அரசே பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்துகிறது. எனவே தமிழக அரசிற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார். ஆனால் இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசோடு தொடர்புடையது. அதுமட்டுமல்லாமல் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்த பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவ்வாறு இருக்கும் போது உயர்நீதிமன்றம் ஒரு மாநில அரசை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பியதுடன் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கொள்ள முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.