Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சிறப்பாக செயல்படும் மாநிலத்திற்கான விருதினை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரை இன்று (21.6.2025) முகாம் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்து, புகையிலை இல்லாத இளைஞர்கள் திட்டம் 2.0ஐ சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிறப்பாக செயல்படும் மாநிலமாக அங்கீரிக்கப்பட்டு, தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய மதிப்பாய்வுக் கூட்டத்தின் போது ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம், தமிழ்நாட்டில் 2007-ஆம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு, சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் தடுப்புசட்டம் - 2003 அமல்படுத்தப்பட்டு பொது இடங்களில் புகைபிடிக்க தடை செய்தல், சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்களை 18 வயதிற்கு குறைந்தவர்களுக்கு மற்றும் கல்வி நிறுவனங்களை சுற்றி 100 முற்றம் சுற்றளவிற்கு விற்பனை செய்வதை தடை செய்தல், புகையிலைப் பொருட்களை விளம்பரம் செய்வதை தடை செய்தல், சுகாதார நல எச்சரிக்கையோடு கூடிய புகைப்படம் புகையிலை பொருட்கள் மீது அச்சிடப்பட்டிருக்க வேண்டும் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், 2.10.2008 முதல் 31.1.2025 வரையில் சட்டமீறல் செய்த 3.89 இலட்சம் நபர்களிடமிருந்து 6.83 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 45,374 பள்ளிகள் மற்றும் 2,153 கல்லூரிகள் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கூடுதல் முயற்சியின் காரணமாக இதுவரை 1,240 கிராமங்கள் புகையிலை இல்லா கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தை படிப்படியாக மேம்படுத்தும் வகையில் COTPA, 2003 சட்டத்திருத்தம் கொண்டு வந்து புகைகுழல் கூடங்களை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

தேசியப் புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு 24.09.2024 முதல் 23.11.2024 வரை 60 நாட்கள் புகையிலையின் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கான புகையிலை இல்லா பிரச்சாரம் நடத்தப்பட்டது.

இவ்வாறு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேசிய அளவில் புகையிலை தடுப்புச் சட்டத்தையும், புகையிலை இல்லாத இளைஞர்கள் திட்டம் 2.0ஐ சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாட்டிற்கு தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய மதிப்பாய்வுக் கூட்டத்தின் போது ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் விருது வழங்கப்பட்டது.

முதலமைச்சர் அவர்களிடம் விருதினை காண்பித்து வாழ்த்து பெற்ற நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டி.எஸ். செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.