Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடிக்கான 18% ஜிஎஸ்டியை அரசே ஏற்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடிக்கான 18% ஜிஎஸ்டியை அரசே ஏற்கும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில், இங்கு காங்கிரஸ் உறுப்பினர் . சந்திரசேகர் உரையாற்றிய போது, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வைப் பற்றிப் பேசியிருக்கிறார். அவர் மட்டுமல்ல; பலரும் இதுகுறித்து என்னிடத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்; மனுக்கள் மூலமாகவும் என்னிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது. ஒரு தொகுதிக்கு ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்கள் நலப் பணிகளெல்லாம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், அதே நேரத்தில் ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகளின் மீது விதிக்கப்படும் 18 சதவீத வரித் தொகையும் இந்த நிதியிலிருந்தே கட்டப்படுவதால்,

தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இதையெல்லாம் கருத்திலே கொண்டு, இதுகுறித்து ஆராய்ந்து, வரி செலுத்துவதால் தொகுதி மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த 18 சதவீத வரித் தொகையை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்பதை உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.