Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பஹல்காம் தாக்குதல் எதிரொலி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ முடிவு!!

டெல்லி : பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலக இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட ஆசிய கிரிக்கெட் அணிகளை உள்ளடக்கி, ஆசிய கிரிக்கெட் வாரியம் செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி பதவி வகிக்கும் சூழலில், ஆசிய கிரிக்கெட் வாரியம் நடத்தும் தொடர்களில் இருந்து விலக இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட தாக்குதலை தொடர்ந்து, பிசிசிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் இலங்கையில் எமார்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை தொடரும், செப்டம்பரில் ஆடவர் ஆசிய கோப்பை தொடரும் நடைபெற உள்ளன. முதற்கட்டமாக இவ்விரு தொடர்களில் இருந்தும் இந்தியா விலக உள்ளதாக பிசிசிஐ ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் பிசிசிஐ மற்றும் ஏசிசி, இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. முன்னதாக காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.