Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்வதேச தொழில் நகரமாக முன்னேறும் தமிழ்நாடு: ஆப்பிள், கூகுள் நிறுவன அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை!!

வாஷிங்டன்: ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களில் பல்வேறு வாய்ப்புகள் மற்றும் உற்சாகமான கூட்டாண்மைகள் வலுப்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக கடந்த 27ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ நகரை 28ம் தேதி சென்றடைந்தார். மேலும், சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களான 6 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதன்படி, நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.450 கோடி முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதேபோன்று, பேபால் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 1000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.150 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோயம்புத்தூர் சூலூரில் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதனை தொடர்ந்து, மைக்ரோசிப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.250 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை, தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுபோன்று, தமிழகத்தில் 4100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புத்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதல்வர் கலந்துரையாடினார். இந்த பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபற்றி அந்நிறுவனங்களின் உயரதிகாரிகள், பிரதிநிதிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் தளத்தில் முதல்வர் பகிர்ந்து கூறியதாவது; 'ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்கு ஒரு பிரமிக்க வைக்கும் வருகை. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் உற்சாகமான கூட்டாண்மைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி இயந்திரங்களில் ஒன்றாகத் தமிழகத்தை மாற்றத் தீர்மானித்துள்ளோம்!'. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.