டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னி வீரர்களின் சேவை காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அக்னி வீரர்களின் தற்போதைய 4 ஆண்டுகால சேவை காலம், கூடுதலாக 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு மொத்தம் 6 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
பாதுகாப்புப் படைத் தளபதி (CDS) ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். முந்தைய விதிமுறையின்படி 4 ஆண்டுகள் முடிந்து வெளியேறவிருந்த 75 சதவீத அக்னி வீரர்களுக்கும் இந்த 'இரண்டாம் கட்ட சேவைக்கால' (Second Tour of Duty) வாய்ப்பு வழங்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் 25 சதவீத அக்னி வீரர்கள் தொடர்ந்து வழக்கமான நிரந்தர ராணுவ வீரர்களாக பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த 6 ஆண்டு கால நீட்டிப்புக்கு பிறகு, விருப்பமுள்ள மற்றும் தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் அக்னி வீரர்கள் முறையான தேர்வு செயல்முறை மூலம் ஆயுதப் படைகளில் நிரந்தரமாகச் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பைத் தேர்ந்தெடுக்கும் வீரர்களுக்கு இந்த கூடுதல் காலத்திற்கான ஊதிய உயர்வும் வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு அக்னிபாத் திட்டம் தொடங்கப்பட்ட போது, அதன் கீழ் சேர்ந்த முதல் பேட்ச் அக்னிவீரர்கள் (சுமார் 18,300 பேர்), இந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தங்களது 4 ஆண்டு காலத்தை நிறைவு செய்யவிருந்த நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


