Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தப்படும் - தேர்தல் ஆணையம்

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் உறுதி அளித்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி உள்கட்சி விவகாரம் குறித்து அதிகார வரம்பு உள்ளதா என்று ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், தேர்தல் ஆணையம் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தாமல் இருப்பது தேவையற்றது. ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், "அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தப்படும். காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தங்கள் தரப்புக்கு மனு நகல்கள் வழங்கப்படவில்லை என ஓபிஎஸ், பெங்களூர் புகழேந்தி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். நகல்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 10ம் தேதி ஒத்திவைத்தனர்.