சென்னை: ஒப்பற்ற நடிப்புத் திறமை கொண்டவராக நடிகர் டெல்லி கணேஷ் திகழ்ந்ததாக நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராமாபுரத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
இந்திய விமானப்படையில் பணியாற்றியவர் டெல்லி கணேஷ். நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பணியை விட்டு விட்டு நாடகங்களில் நடித்தார். பிறகு சினிமாவுக்கு வந்தார். தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள வல்லநாடுதான் அவரது சொந்த ஊர். படித்துவிட்டு, ஏர்ஃபோர்ஸில் வேலை பார்த்தார். தலைநகர் டெல்லியில் வேலை பார்த்தபோது அங்கே நாடகம் போட்டதுதான் அவருக்கு நடிப்பில் பிள்ளையார் சுழி. பின்னர் சென்னைக்கு வந்து காத்தாடி ராமமூர்த்தியுடன் நட்பு ஏற்பட, அவரின் நாடகக் குழுவில் இணைந்தார். டெல்லியில் பணி செய்ததாலும் இந்தி நன்றாக பேசத் தெரியும் என்பதாலும் அவரது பெயருக்கு முன்னால் டெல்லி சேர்ந்து கொண்டது.
டெல்லி கணேஷின் சினிமா பிரவேசம் ‘பட்டினப்பிரவேசம்’ மூலமாகத்தான் அமைந்தது. இதையடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக நல்ல கேரக்டர்கள் வர ஆரம்பித்தன. காமெடியாக நடிப்பது இவருக்கு கைவந்த கலை. அதேபோல் குணச்சித்திர வேடங்களிலும் அசத்துவார். ‘டெளரி கல்யாணம்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ என ஒருபக்கம் விசு தொடர்ந்து இவரை பயன்படுத்தினார். ‘புன்னகை மன்னன்’, ‘சிந்து பைரவி’, ‘உன்னால் முடியும் தம்பி’ என்று பாலசந்தர் பல படங்களில் கொடுத்ததெல்லாம் அற்புத கேரக்டர்கள். அதிலும் ’சிந்து பைரவி’யின் மிருதங்க குருமூர்த்தி கேரக்டர் ரசிகர்களால் மறக்கவே முடியாது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
* பிரதமர் மோடி இரங்கல்
புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் மறைவால் ஆழ்ந்த வருத்தம். அவர் பாவம் செய்ய முடியாத நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அவர் கொண்டு வந்த ஆழத்திற்காகவும், தலைமுறைகள் கடந்தும் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனுக்காகவும் அவர் அன்புடன் நினைவுகூரப்படுவார். நாடகத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்

