Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

61 நாள் தடை காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு; டெல்டாவில் 20,000 மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தம்: படகுகளில் மீன்பிடி உபகரணங்கள், ஐஸ் கட்டிகள் ஏற்றும் பணி மும்முரம்

நாகை: மீன் பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவதால் டெல்டாவில் சுமார் 20,000 மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். தமிழகத்தில் கிழக்கு கடற்கரை மாவட்டங்களில் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி துவங்கியது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால் உள்பட 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மீனவர் குடும்பங்களுக்கு தமிழக அரசால் தலா ரூ.8000 தடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது.

தடைகாலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி உபகரணங்களை சீரமைத்தனர். ஒவ்வொரு படகுக்கும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு செய்து, சீரமைப்பு பணி நடந்தது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் நாளை(14ம் தேதி) நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. நாகை மாவட்டத்தில் 590 விசைப்படகுகளை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள், தஞ்சை மாவட்டத்தில் 146 விசைப்படகுகளை சேர்ந்த 2,000 மீனவர்கள், மயிலாடுதுறை மாவட்டத்தில் 5,000 மீனவர்கள், புதுகை மாவட்டத்தில் 3,000 மீனவர்கள், காரைக்காலில் 500 மீனவர்கள் ஓய்வில் இருந்தனர். இவர்கள் நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். முன்னதாக தடை காலத்தில் மீனவர்களின் படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மீன்பிடிப்பதற்கு தேவையான சான்றிதழ்களை மீனவர்கள் புதுப்பித்தனர்.

மேலும், படகுகள் பதிவு, மீன்பிடி உரிமம் தொடர்பான ஆவணங்கள் சரியாக உள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதேபோல் கடந்த 2 நாட்களாக ஐஸ் கட்டிகள், வலைகள், மீன் பிடி உபகரணங்களை படகுகளில் ஏற்றி வருகின்றனர். மேலும் படகுகளில் மானிய டீசல் நிரப்பும் பணியும் நடந்து வருகிறது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு மேல் அல்லது நாளைமறுதினம் அதிகாலை முதல் மீனவர்கள் படகுகளுக்கு மாலை அணிவித்து, தீபாராதனை காட்டி, பூஜை செய்து கடலுக்கு புறப்பட உள்ளனர். மீனவர்கள் 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் மீன்கள் விலை குறைய வாய்ப்புள்ளது. அதேபோல் மீனவர்கள் மட்டுமின்றி மீன் பிடி தொழில் சார்ந்த சுமார் 10 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.