கல்லூரி மாணவர்களுக்கு உயர்ரக கஞ்சா சப்ளை நடிகர் மன்சூர் அலிகான் மகன் உள்பட 7 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
சென்னை: சென்னையில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளது. மன்சூர் அலிகான் மகன் உள்பட 7 பேரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க அம்பத்தூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு உயர் ரக போதை பொருட்கள், கஞ்சா சப்ளை செய்த வழக்கில் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை முகப்பேர் மற்றும் காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் படித்துவரும் மாணவர்களுக்கு போதை பொருட்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள், ஆயில் சப்ளை செய்த வழக்கு தொடர்பாக அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து போதை பொருட்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா ஆயில் பறிமுதல் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களின் செல்போனில் தொடர்புகொண்டு பேசிய நபர்களின் விவரத்தை தனிப்படை போலீசார் சேகரித்தனர். இதில் பிரபல நடிகர் மன்சூர்அலிகானின் மகனும் உதவி இயக்குனருமான அலிகான் துக்ளக்(26) என்பவரின் செல்போன் நம்பர் பதிவாகியிருந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டில் இருந்த
அலிகான் துக்ளக்கை ஜெ.ஜெ.நகர் காவல்நிலையம் அழைத்து வந்து விடிய, விடிய விசாரணை நடத்தினர்.
இதன்பின்னர் அலிகான் துக்ளக் கொடுத்த வாக்குமூலத்தின்படி, மேலும் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஒ.ஜி உயர்ரக ஒரிஜினல் கஞ்சா வாங்கி சப்ளை செய்துள்ளது தெரிந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் மற்றும் சாகி(22), மொஹம்மது ரியாஸ் அலி(26), பைசல் அஹமது(26), சந்தோஷ், குமரன், யுகேஷ் உட்பட 7 பேரை கைது செய்து இவர்களிடம் இருந்து ஒ.ஜி ஒரிஜினல் கஞ்சா மற்றும் 7 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுசம்பந்தமாக மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான நம்பரை வைத்து பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இவர்களிடம் இருந்து மெத்தமைட்டன், மேஜிக் மக்கூர்ன் உள்ளிட்ட போதை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்த 7 பேரை அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 7 பேரையும் வரும் 18ஆம் தேதி வரை மொத்தம் 15 நாள் நீதி மன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


