10 ஆண்டை கடந்த திவால் சட்டம்; வராக்கடனுக்கு தீர்வா... வராமல் தடுக்கும் வழியா? பலன் பெற்ற நிறுவனங்கள் பட்டியல் நீள்கிறது: பகீர் கிளப்பும் பரபரப்பு தகவல்கள்
2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தபோது, 2014-15ல் வங்கிகளின் வராக்கடன் ரூ.3.25 லட்சம் கோடி. இது அடுத்தடுத்த நிதியாண்டுகளில் ரூ.6.12 லட்சம் கோடி, ரூ.7.92 லட்சம் கோடி என உயர்ந்து கொண்டே செல்கிறது. பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு வராக்கடன் உயர முக்கிய காரணம், ரிசர்வ் வங்கி 2015ல் மேற்கொண்ட சொத்து தர மதிப்பாய்வு (ஏகியூஆர்). வங்கிகள் வெளிப்படையாக அறிவிக்காமல் வைத்திருந்த வாராக் கடன்களை வெளிக்கொண்டு வருவதும், கணக்குகளைச் சரியாக வகைப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாக கூறப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் சொத்து தர மதிப்பாய்வு மூலம் வங்கிகளின் மிகப்பெரிய அளவிலான வாராக்கடன்கள் விவரம் அம்பலமானபோது, அவற்றை விரைவாக மீட்க பழைய சட்டங்கள் போதுமானதாக இல்லை என்ற முடிவுக்கு வந்த ஒன்றிய அரசு, இதற்கு தீர்வாக திவால் சட்டம்- 2016ஐ கொண்டு வந்தது. பழைய நடைமுறையில் அதிகார மோதலும் தீர்வு கிடைக்க இழுபறியே நீடிப்பதாக கூறி பல சட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்களை ஒருங்கிணைத்து திவால் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது.
இந்த புதிய சட்டத்தால் கடன் பாக்கியை வசூலித்து விடலாம். எந்த நிறுவனமும் ஏமாற்றி தப்ப முடியாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக கூறியது. ஆனால், சட்டம் வந்த பிறகும் வராக்கடன் அதிகரித்ததாகத்தான் புள்ளி விவரங்கள் வெளியாகின. புதிய சட்டத்தில் 5 முக்கிய விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. அவை:
1. காலக்கெடுவுக்குள் தீர்வு
2. கடன் வழங்கியோர் கட்டுப்பாட்டில் செயல்முறை
3. நிறுவனத்தை முடக்காமல் மீட்பது
4. சொத்து மதிப்பை அதிகபட்சமாக்குதல்
5. கடன் வழங்குபவர்களுக்கு அதிகபட்ச மீட்பு
ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் புள்ளிவிவரங்கள் வேறு ஒரு கேள்வியை எழுப்புகின்றன. அதாவது, இந்திய திவால் வாரிய புள்ளிவிவரங்களினின்படி அங்கீகரிக்கப்பட்ட 1,164 கார்ப்பரேட் திவால் தீர்மான செயல்முறைக்கு வந்தவற்றில் 564 வழக்குகளில், அதாவது 48.5% வழக்குகளில், திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட நிறுவனங்கள் 80 சதவீதத்துக்கும் அதிகமான தள்ளுபடியை சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதிலும் 355 வழக்குகள் அதாவது 30.5 சதவீத வழக்குகள், 90 சதவீதத்துக்கும் அதிகமான தள்ளுபடி பெற்றவை.
அதாவது, அந்த வழக்குகளில் கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டியதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே பெற்றுள்ளன. சில நிறுவன வழக்குகளில் இந்த வித்தியாசம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயாக உள்ளது. மேற்கண்ட சட்ட விதிகளின்படி நிறுவனம், ஏற்கப்பட்ட கடன் கோரிக்கை, வங்கி/ நிதி நிறுவனங்களுக்கு கிடைத்த தொகை, இழப்பு சதவீதத்தில் வருமாறு:
* பட்டியலில் அதிகபட்ச பலன் அடைந்த நிறுவனம் லேன்கோ தெர்மல் பவர். இந்த நிறுவனத்தின் பாக்கி ரூ.33,331.03 கோடி இதில், ரூ. 136.25 கோடி மட்டுமே வங்கி அல்லது நிதி நிறுவனத்தால் பெறப்பட்டது. மொத்த பாக்கியில் 0.41 சதவீதம்தான் வசூலானது. மீட்கப்படாதது 99.59 சதவீதம்.
* இதற்கு அடுத்ததாக, வீடியோகான் நிறுவன கடன் ரூ.64,838.63 கோடி . இதில் வசூல் ரூ. 2,962.02 கோடி. அதாவது 95.43% வரவில்லை.
* எரா இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனத்தின் ரூ.21,946 கோடி கடனில், ரூ.2,062 கோடி மட்டுமே மீட்கப்பட்டது. அதாவது, ரூ.19,884 கோடி மீட்கப்படவில்லை; 90.60 சதவீதம் வங்கிகளுக்கு இழப்பு.
* ரிலையன்ஸ் இன்ப்ரா டெல் நிறுவனத்தின் ரூ.42,394 கோடி கடனில், ரூ.4,267 கோடி மட்டுமே மீட்கப்பட்டது. இதன்படி, சுமார் ரூ.38,127 கோடி மீட்கப்படவில்லை; அதாவது சுமார் 89.9 சதவீதம் வரவில்லை.
* ரிலையன்ஸ் நேவல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் ரூ.12,512.84 கோடி கடனில் மீட்கப்பட்டது ரூ.2,040 கோடி. இதன்படி, சுமார் ரூ.10,472.84 கோடி மீட்கப்படவில்லை.
* அலோக் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரூ.29,523.86 கோடி கடனில், ரூ.5,052 கோடி மட்டுமே மீட்கப்பட்டது. அதாவது, 82.89 சதவீதம் வரவில்லை.
* ஏர்செல் நிறுவனத்தின் பாக்கி வைத்திருந்த சுமார் ரூ.36,102 கோடி கடனில் சுமார் ரூ.6,660 கோடி மட்டுமே மீட்கப்பட்டது. இதன்படி, சுமார் ரூ.29,442 கோடி மீட்கப்படவில்லை; அதாவது சுமார் 81.6 சதவீதம் வரவில்லை.
* ஆம்டெக் ஆட்டோ நிறுவனம் பாக்கி வைத்திருந்தது ரூ.12,641 கோடி கடன். இதில், ரூ.2,615 கோடி மீட்கப்பட்டது என ஐபிபிஐ தரவு காட்டுகிறது. இதன்படி, சுமார் ரூ.10,026 கோடி மீட்கப்படவில்லை; சுமார் 79.3 சதவீதம் வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
* மானெட் இஸ்பாட் அண்ட் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து வசூலிக்க வேண்டியது ரூ.11,015 கோடி. ஆனால், ரூ.2,892 கோடி மீட்கப்பட்டது என ஐபிபிஐ தரவு காட்டுகிறது. இதன்படி, ரூ.8,123 கோடி மீட்கப்படவில்லை; அதாவது, 73.7 சதவீதம் வரவில்லை.
இவ்வாறு வராத தொகை அல்லது வசூலிக்கப்படாத, முடியாத கடன் நிலுவை தொகை என்பது தான் திவால் நிறுவனங்கள் பெற்ற லாபம். அதாவது, கடன் கொடுத்த வங்கி/ நிதி நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு, திவால் நிறுவனத்துக்கு லாபமாகி விட்டது. இதனை தள்ளுபடி என்று தான் கணக்கில் கொள்ள வேண்டும் என்கின்றனர் வங்கி துறையினர். ஏனெனில், தள்ளுபடி இல்லை என ‘டெக்னிக்கலாக‘ கூறினாலும்.
இவையெல்லாம் வசூலிக்க முடியாத,வசூலிக்க சாத்தியமில்லாத ஒன்றுதான் என கடந்த கால கடன் மீட்பு முயற்சிகள் வெளிக்காட்டுகின்றன என்பதே அவர்கள் வாதம். திவால் சட்டம் அமலுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடன் வசூலுக்கான ஒரு ஒருங்கிணைந்த சட்டக் கட்டமைப்பை உருவாக்கியிருப்பது மட்டுமே அதன் சாதனை. ஆனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் கோரிக்கைகளில் 80, 90, ஏன் 99 சதவீதத்துக்கும் மேல் தொகை மீட்கப்படாத வழக்குகள் இருப்பது, இந்தச் சட்டத்தின் நடைமுறை செயல்திறன் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன.
கடன் வழங்கியவர்கள் பெரும் தொகையை இழக்கும் நிலையில், ஒரு நிறுவனம் திவால் நடைமுறைக்கு வரும் முன்பே அதன் மதிப்பு எந்த அளவுக்கு சரிந்தது, வழக்குகள் ஏன் நீண்ட காலம் இழுக்கின்றன, கடன் வழங்கும் நிலையிலேயே ஏற்பட்ட தவறுகளுக்கு யார் பொறுப்பு என்பதற்கான கேள்விகளுக்கும் விடை தேவைப்படுகிறது. எனவே, அடுத்த கட்ட சீர்திருத்தம் திவாலான நிறுவனத்தை எப்படித் தீர்ப்பது என்பதில் மட்டும் அல்ல;
அது அந்த நிலைக்கு செல்லும் முன்பே எப்படி தடுக்கலாம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. கொடுத்த கடனை அதிகபட்சமாக மீட்க இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்வதும் அதற்கான விதிகளை திருத்தி வெளிப்படையான தீவிர அமலாக்கம் மூலம் கடன் வழங்கிய வங்கிகள் பலன் அடையும் வகையில் செயல்படுத்துவதே தீர்வாக அமையும் என்பதை வங்கியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
* இதுவரை சாதித்தது என்ன?
2016-ல் அமலுக்கு வந்த திவால் சட்டம் நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு சென்றால், நீண்டகால வழ,க்குகளில் சிக்கவிடாமல், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறுவனத்தை மீட்பது அல்லது கலைப்பது என்ற புதிய நடைமுறையை கொண்டு வந்தது. இதன் மூலம், கடனாளியை மையமாகக் கொண்ட பழைய முறையிலிருந்து கடன் வழங்கியவர்களை மையமாகக் கொண்ட தீர்வு முறைக்கு மாறியது.
ஆனால், கடந்த மார்ச் மாத நிலவரப்படி இந்த சட்டத்தின் கீழ் 8,987 நிறுவன திவால் தீர்வு வழக்குகள் (CIRP) ஏற்கப்பட்டுள்ளன. அவற்றில் 7,102 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இதில் 1,419 நிறுவனங்களுக்கு தீர்வுத் திட்டங்கள் மூலம் மீட்பு கிடைத்துள்ளது. மேலும், தீர்வுத் திட்டங்கள் மூலம் கடன் வழங்கியவர்களுக்கு சுமார் ரூ.4.32 லட்சம் கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
* சட்டம் வந்த பிறகும் தப்பிய பொருளாதார குற்றவாளிகள்
திவால் சட்டம் 2016 அமலுக்கு வந்த பிறகும், பெரிய வங்கி கடன் மோசடி மற்றும் வசூல் சிக்கல்கள் முற்றிலும் முடிவுக்கு வரவில்லை. விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி ஆகியோர் தொடர்பான வழக்குகளில், வங்கிகளின் பெரும் கடன் தொகைகளை மீட்பது மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துகள்/நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நீண்டகால சவாலாகத் தொடர்ந்தன. வெளிநாடு தப்பிய இவர்களை இன்று வரை நாடு கடத்தவோ, கடனை வசூலிக்கவோ இயலவில்லை.
* விஜய் மல்லையா: கடன் நிலுவை ரூ.6,848 கோடி; வட்டியுடன் சேர்த்து நிலுவை ரூ.17,781 கோடி. 2025 ஏப்ரல் நிலவரப்படி ரூ.10,815 கோடி மீட்கப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்தது.
* நீரவ் மோடி: பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ஏற்பட்டதாக கூறப்படும் இழப்பு ரூ.6,498 கோடி. அமலாக்கத்துறை அறிக்கையின்படி இழப்பு ரூ.1,052 கோடி. பின்னர் ரூ.60.33 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.
* மெகுல் சோக்ஷி: அமலாக்கத்துறை அறிக்கைப்படி இழப்பு ரூ.6,098 கோடி. முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் ரூ.2,566 கோடி.
* வின்சம் டயமண்ட் ஜதின் மேத்தா: வங்கிகளுக்கான மொத்த கடன் பொறுப்பு ரூ.6,800 கோடிக்கும் மேல்). எஸ்பிஐ தாக்கல் செய்த தனிப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை ரூ.457.31 கோடி என என்சிஎல்டி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
* மொத்த திவால் வழக்குகள்: 8,987
* வசூலிக்க வேண்டிய நிலுவை : 14.14 லட்சம் கோடி ரூபாய்
* வசூல் செய்தது 4.32 லட்சம் கோடி ரூபாய்
* திவாலாகும் வரை காத்திருக்க வேண்டுமா?
திவால் சட்டம் கடன் தீர்வுக்கானதாக கருதப்பட்டாலும், ஒரு நிறுவனம் திவாலாகும் வரை கடன் வசூலில் மெத்தனம் காட்டுவதும் தாமத நடவடிக்கை எடுப்பதும் மக்களின் வரிப்பணத்தை பெரு நிறுவனங்கள் ஏகபோகமாக அனுபவிப்பதற்கு வழி வகுக்கின்றன என வங்கியாளர்கள் கூறுகின்றனர். நிறுவனத்தின் நிதி நிலை மோசமடையும் ஆரம்ப நிலையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதன் சொத்துகள் மற்றும் வணிக மதிப்பை அதிகமாக பாதுகாத்திருக்க முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
திவால் நடைமுறையில் பல வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நீடிக்கின்றன. வழக்குகள் நீளும்போது நிறுவனத்தின் வணிகம், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், சொத்துகள் ஆகியவற்றின் மதிப்பு மேலும் குறைய வாய்ப்பு உள்ளது எனகூறப்படுகிறது. இது மீட்பு நடவடிக்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர்.
ஒரு நிறுவனம் வராக்கடன் பட்டியலுக்குள் செல்லும்போதே வாடிக்கையாளர் இழப்பு, ஊழியர்கள் வெளியேற்றம், செயல்பாட்டு மூலதனம் குறைவு, உரிமங்கள் பாதிப்பு, சந்தை மதிப்பு மற்றும் உற்பத்தி சொத்துக்களின் மதிப்பு குறைவு போன்றவை ஏற்படலாம். இதை கருத்தில் கொண்டு முன்கூட்டிய நடவடிக்கைகள், திட்டமிடல் தேவை என தொழில்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
* தள்ளுபடி... தள்ளிவைப்பு... வார்த்தை ஜாலம் வராததே நிஜம்
விஜய் மல்லையா, முகுல் சோக்ஷி போன்றவர்கள் வங்கிக் கடன் மோசடியில் சிக்கிய நிலையில், அவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, 50 வாராக்கடன்தாரர்களின், ரூ.68,607 கோடி மதிப்பிலான சொத்துகள் கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்தது.
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய பிறகு, இது தள்ளுபடி அல்ல தள்ளி வைப்பு என வங்கி தரப்பில் விளக்கம் தரப்பட்டது. ஒரு கடன் வாராக்கடன் ஆக மாறிய பிறகு, இனி அந்தக் கடன் வரவே வராது என்ற முடிவுக்கு வந்து அதற்கான பட்டியலில் இருந்து அதனை வங்கிகள் நீக்கி வைக்கும். ஆனால் டெக்னிக்கலாக தள்ளுபடி இல்லை என வார்த்தை ஜாலத்தில் கூறினாலும், உண்மையில் வசூலிக்கவே முடியாத இந்த தொகையை தள்ளுபடி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது வங்கி ஊழியர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது.
* அதிர்ச்சியை ஏற்படுத்திய சுபாஷ் சந்திரா வழக்கு
திவால் சட்டத்தின் கடன் வசூல் தொடர்பான சர்ச்சையை மேலும் தீவிரமாக்கியுள்ளது எஸ்ஸெல் குழும நிறுவனர் சுபாஷ் சந்திரா தொடர்பான திவால் வழக்கு. அவரது தனிப்பட்ட உத்தரவாதத்தின் கீழ் உள்ள கடன் தொடர்பாக, ரூ.22,006.57 கோடி அளவிலான கடன் தீர்வு கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில், வெறும் ரூ. 6.25 கோடியை செலுத்தும் திட்டத்துக்கு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி எல்சிஎடியின் ஒரு அமர்வு ஒப்புதல் அளித்தது.
இது கணக்கீட்டளவில் 99.97% குறைப்பு. இதற்கு கடன் வழங்கிய வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த 5 உறுப்பினர் கொண்ட என்சிஎல்டி சிறப்பு அமர்வு செப்டம்பர் 1 அன்று அந்த உத்தரவின் செயல்பாட்டை நிறுத்தி வைத்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
சுபாஷ் சந்திரா எந்த சொத்தையும் விற்கவோ, மாற்றவோ கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடனை அதிகபட்சமாக மீட்பதே சட்டத்தின் நோக்கம் என்றால், ரூ.22,000 கோடி பாக்கியில் வெறும் ரூ.6.25 கோடி செலுத்தினால்போதும் என்ற தீர்வு எப்படி சாத்தியமானது? என்ற கேள்விகள், சட்டத்தின் நோக்கத்தையும் செயல்பாட்டையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.
* இதுவரை சாதித்தது என்ன?
2016-ல் அமலுக்கு வந்த திவால் சட்டம் நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு சென்றால், நீண்டகால வழ,க்குகளில் சிக்கவிடாமல், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறுவனத்தை மீட்பது அல்லது கலைப்பது என்ற புதிய நடைமுறையை கொண்டு வந்தது. இதன் மூலம், கடனாளியை மையமாகக் கொண்ட பழைய முறையிலிருந்து கடன் வழங்கியவர்களை மையமாகக் கொண்ட தீர்வு முறைக்கு மாறியது.
ஆனால், கடந்த மார்ச் மாத நிலவரப்படி இந்த சட்டத்தின் கீழ் 8,987 நிறுவன திவால் தீர்வு வழக்குகள் (CIRP) ஏற்கப்பட்டுள்ளன. அவற்றில் 7,102 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இதில் 1,419 நிறுவனங்களுக்கு தீர்வுத் திட்டங்கள் மூலம் மீட்பு கிடைத்துள்ளது. மேலும், தீர்வுத் திட்டங்கள் மூலம் கடன் வழங்கியவர்களுக்கு சுமார் ரூ.4.32 லட்சம் கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.


