Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அயலக இந்தியரின் வங்கி லாக்கரில் திருட்டு; வங்கி ஊழியர் கைது: நகை, பணம் மீட்பு!

சென்னை: சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு (Central Crime Branch CCB), தனியார் வங்கி ஊழியர் தொடர்புடைய வங்கி லாக்கர் திருட்டு வழக்கில் திருடப்பட்ட நகை மற்றும் ரொக்கம் அனைத்தையும் மீட்டுள்ளது. இதில் ரூ.20.60 லட்சம் ரொக்கமும், திருடப்பட்ட நகைகளின் உருக்கிய வடிவமான 188 கிராம் தங்கக் கட்டியும் அடங்கும்.

அமெரிக்காவில் வசிக்கும் அயலக இந்திய வாடிக்கையாளரான சுரூபா ராணி சிவக்குமார் என்பவர், தனியார் வங்கியின் வேளச்சேரி கிளையில் லாக்கர் வைத்திருந்தார். அவர் அடிக்கடி லாக்கரைப் பயன்படுத்தாததால், லாக்கரை அணுகும் உரிமையைச் சென்னையில் வசிக்கும் தனது தாயிடம் ஒப்படைத்திருந்தார். ஒரு வழக்கமான சரிபார்ப்பின்போது, லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 238 கிராம் தங்க நகைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது சகோதரர் செந்தில்குமார் காவல் ஆணையாளரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், 12.11.2025 அன்று மத்திய குற்றப்பிரிவு, EDF-3 காவல் உதவி ஆணையாளர் அவர்களால் வழக்குப்பதிவு செய்து, காவல் ஆய்வாளர் Beta-6 அவர்களால் புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் துரித விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சென்னைபெருநகர காவல் ஆணையாளர்ஆ.அருண் உத்தரவின்படி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் A.ராதிகா, வழிகாட்டுதலின் பேரில் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்து லாக்கர் சாவியை பெற்று பயன்படுத்திய தனியார் வங்கியின் வேளச்சேரி கிளையில் Grade-II மேலாளராகவும், லாக்கர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராகவும் (Locker Vault Incharge) இருந்த வங்கி ஊழியரை விசாரணை செய்தும், தகுந்த நவீன தொழில் நுட்ப சான்றுகளுடன் அவர் குற்ற செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் 12.11.2025 அன்று, தனிப்படையினர் வங்கி வளாகத்தில் வைத்து சம்பந்தப்பட்ட வங்கி ஊழியரை முறையான விசாரணை செய்து பின்னர் கைது செய்து, விசாரணையில் எதிரி லாக்கரை அங்கீகாரமின்றித் திறந்து, நகைகளை எடுத்து, அதை வேளச்சேரியில் உள்ள தனியார் அடகு கடையில் ரூ.21 லட்சத்திற்கு விற்றுவிட்டதாகவும், மீதமுள்ள ரொக்கத்தை தான் வேலை செய்து வரும் வங்கி அலுவலகத்திலயே மறைத்து வைத்திருப்பதாகவும் கொடுத்த வாக்குமூலத்தின்படி மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர், தனியார் வங்கியின் மீட்டிங் அறையிலிருந்து ரூ.20,60,000/- ரொக்கம், மற்றும் வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகரில் அடகு கடையிலிருந்த 188 கிராம் உருக்கிய தங்கக் கட்டிகள் ஆகிய வழக்கு சொத்தை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட வங்கி ஊழியர் 12.11.2025 அன்று சைதாப்பேட்டை11-வது பெருநகர நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் பொதுமக்களிடம் நிதி நிறுவனங்களில் நடக்கும் நம்பிக்கைத் துரோகம், மோசடி அல்லது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் லாக்கர் வசதியுடைய வங்கி வாடிக்கையாளர்கள் தனிநபரிடமோ அல்லது அலுவலர்களிடமோ தங்கள் லாக்கர் வசதிகளை பயன்படுத்திட அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.