Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அச்சத்தை விரட்டி, வாழ்வில் வெல்லுங்கள்!

நாம் எதை செய்தாலும் அதை விமர்சிக்கவும், குறை கூறவும் பலர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைவார்கள். அதை பற்றி கவலைப்படாமல் நேரிய வழியில் பயணப்பட்டுக் கொண்டே இருங்கள். படுத்துக் கிடப்பவனுக்கு பூமி ஒரு பாய், எழுந்து நடப்பவனுக்கு அது ஒரு பாதை,என்கிறார் கவிஞர் மேத்தா. பயணப்படு பவர்களுக்கு மற்றவர்களை விமர்சிக்க நேரமில்லை, படுத்துக்கிடப்பவர்களுக்கு அதை விட்டால் வேறு வேலை இல்லை.

அவரவர்கள் வேலையை அவரவர்கள் பார்த்தால் யாருக்கும் பிரச்சனை இல்லை என்பது உண்மைதான்! ஆனால் அவன் என்ன செய்கின்றான்? இவன் என்ன செய்கின்றான்? என்று பார்ப்பதிலேயே தனது சொந்த வாழ்க்கையைத் தொலைத்து விடும் புல்லுருவிகள் பலரை அன்றாட வாழ்க்கையில் பார்க்கலாம்.

இவர்களைத்தான் பாரதி வேடிக்கை மனிதர் என்று குறிப்பிடுகிறாரோ என்ற சந்தேகம் எழுவது உண்டு. ஆனால் ஒருவன் தனக்கென ஒரு லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு, அதை அடைவதற்காக இரவும், பகலும் உழைக்கும் போது ‘நாயாக அலைகிறான்’ என்றோ ‘பேராசை பிடித்தவன்’ என்றோ அவதூறாகவோ, அலட்சியமாக பேசுவதில் என்ன இவர்கள் காண்கிறார்களோ தெரியவில்லை. தெருவில் கிடந்த எலும்புத் துண்டை நாய் கவ்வி கடிக்கத் தொடங்கியது.

அவ்வாறு கடிக்கும் போது அந்த எலும்பு சிறு,சிறு துண்டுகளாக உடைந்து அதனுடைய வாயையும், நாக்கையும் கிழித்து விட்டது. அதனால் ரத்தம் வரத் தொடங்கியது, அந்த ரத்தம் எலும்பிலிருந்து வருவதாக கருதி தனது ரத்தத்தை தானே சுவைத்து இன்பம் அடைந்ததாம் அந்த நாய். அதுபோலத்தான் மற்றவர்களின் உழைப்பையும், முயற்சிகளையும், முன்னேற்றத்தையும் தாங்க முடியாமல்.. பொறாமை கொண்டு, அவர்களைப் பற்றி அவதூறுகள் பேசி தங்களுக்குத் தாங்களே அற்ப சந்தோஷப்படுபவர்களும் உண்டு.

அத்தகையவர்களின் தரம் கெட்ட விமர்சனங்களைக் கண்டு ஒருபோதும், நமது நேர்மையை முயற்சியை, உற்சாகத்தை, உழைப்பை, பண்பான அணுகுமுறையை, பொறுமையான சுவாசத்தைக் கைவிடக்கூடாது.

முடியுமா?என்று கேட்டால் நிச்சயமாக நீங்கள் எதிலும் வெற்றி பெற முடியாது. என்னால் செய்ய முடியும் என்ற இந்த ஐந்து வார்த்தைகள் தான், எப்போதும் உங்கள் மனதிலும், செயலிலும் ஒலித்துக் கொண்டும், பிரகாசித்துக் கொண்டும் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களின் எல்லாக் கனவுகளும் நிறைவேறும் என்கிற ராபர்ட் ஹைச் ஹில்லர்.

அச்சத்தை விரட்ட இரண்டு வழியில் இருக்கின்றன. ஃபைட் அல்லது பிளைட் என்பதே பயத்தை ஒழிக்கும் இரண்டு வழிகள். ஒன்று எது பயமோ அதை நேருக்கு நேர் எதிர்த்துப் போராடுவது அதாவது ஃபைட், இன்னொன்று எது பிரச்னையோ அதை விட்டுவிட்டு ஓடிவிடுவது. அதாவது பிளைட் அங்கிருந்து பறந்து விடுவது. துணிச்சலானவர்கள் பயத்தை எதிர்கொண்டு காரியத்தில் இறங்கி விடுவார்கள். துணிச்சல் இல்லாதவர்கள் செய்ய வேண்டிய எதையும் செய்யாமல் விட்டு விலகப் பார்ப்பார்கள். நீங்கள் எந்த ரகம் என்பதை சிறிது நேரம் கண்ணை மூடி பின்னோக்கிப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.

எந்த நேரமும் அச்சத்தைத் தோளில் சுமந்து கொண்டே திரியக்கூடாது. செருப்பை வீட்டின் வாசலிலே கழற்றி வைப்பது போல அச்சத்தையும் அதற்கான ஒரு இடத்தில் இறக்கி வைத்துவிட்டு, துணிச்சல் என்ற மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு வாழ்க்கையை கொண்டாடுங்கள்.

குரு ஒருவர் நள்ளிரவு தன் அறையில் அமர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். திருடன் ஒருவன் கத்தியுடன் உள்ளே நுழைந்தான். அவனை பார்த்து கேட்டார், உனக்கு என்னப்பா வேண்டும், உயிரா? பணமா? திருடன் திகைத்து போனான். திருடன் மிரட்டுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது என்று ஏமாற்றம் அடைந்தான். “நான் பணத்திற்காக தான் வந்தேன்” என்றான் திருடன் மெல்ல, சரி அதை வந்தவுடன் சொல்ல வேண்டியதுதானே! என்று சொல்லிவிட்டு அவனுக்கு கணிசமான அளவு பணம் தந்து விட்டு அமைதியாக மீண்டும் கடிதம் எழுத ஆரம்பித்தார். திருடனுக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது. குருவின் அமைதி அவனை என்னவோ செய்தது.கையில் பணத்துடன் வெளியே போகத் திரும்பினான் திருடன்.

“இந்தாப்பா போகும்போது கதவை சாத்திவிட்டு போ என்றார் கடிதம் எழுதிய படியே” திருடன் ஒரு கணம் அவரைத் திரும்பிப் பார்த்தான். ஓசைப்படாமல் மெல்லக் கதவை சாத்திவிட்டு வெளியேறினான். சில நாளில் அவன் பிடிப்பட்டான். காவலரிடம் அவன் இப்படி சொன்னான்.

“நான் ரொம்ப நாளா திருட்டு தொழில் செய்து வருகிறேன். ஆனால் அந்த குரு மாதிரி ஒரு ஆளை நான் பார்த்ததில்லை. ரொம்ப பயங்கரமானவர். என்ன வேணும்? உயிரா? பணமா அப்படி என்று கேட்கின்றார். நான் பயந்தே போய் விட்டேன் ஐயா! நான் சிறைவாசம் முடிந்த உடனே அவரை போய் பார்க்க வேண்டும். தைரியத்தை அவர்கிட்ட தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றான் திருடன்.

உண்மை ஞானிக்கு உயிர் ஆசை இல்லை. உயிர் ஆசை இல்லாததால் அச்சமில்லை, அச்சம் இல்லாதவனுக்கு அகிலமும் அடங்கும் என்கிறது ஜென் தத்துவம்.

எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. நீ முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. மலையாக இருந்தாலும் முட்டி மோதிவிடு. சுக்கு நூறாகப் போவது மலைதான், ஏனென்றால் உன் உறுதி மலையை விட 100 மடங்கு மேலானது என்கிறார் சுவாமி விவேகானந்தர்.இந்த கருத்துக்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.

தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நௌஷீன் பானு சந்த் என்ற விளையாட்டு வீராங்கனை, இமயமலைப் பகுதியில் நடைபெறும் 42 கிலோமீட்டர் தூரம் கொண்ட ‘டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான்’ ஓட்டப்பந்தயத்தை 2024ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று முறை நிறைவு செய்துள்ளார்.

மிகவும் சவாலான புவியியல் சூழலிலும், குறைந்த ஆக்சிஜன் அளவு நிலவும் உயரமான பகுதிகளிலும் இந்த ஓட்டப்பந்தயம் நடைபெறுவதால், இது உலகின் மிகவும் கடினமான மாரத்தான் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தச் சாதனையை பாராட்டி, விண்வெளி விஞ்ஞானி கல்பனா சாவ்லா நினைவாக வழங்கப்படும் விருது நௌஷீன் பானுவுக்கு தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. இந்த விருது பெற்றதைக் குறித்து ஊடகங்களில் அவர் பேசியது என்னவென்றால் இந்த இடத்தை அடைவதற்குப் பின்னால் பல தோள்கள் உதவியிருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் மற்றும் தன்னை ஊக்குவித்த பலரின் ஆதரவே இந்த வெற்றிக்கு அடிப்படை என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

எவரெஸ்ட் மாரத்தான் போன்ற கடினமான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வெற்றி பெறுவது என்பது உடல் வலிமை மட்டுமல்லாமல், மன உறுதியும் தேவைப்படும் செயல் என்கிறார் நௌஷீன் பானு,பெண்கள் இதுபோன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும், இளைய தலைமுறையினர் இதிலிருந்து ஊக்கம் பெற வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

கோவையைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனை சர்வதேச அளவில் இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது, தமிழக விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

உலகிலேயே மிகக் கடுமையான மற்றும் மிக உயரமான இடத்தில் நடைபெறும் மாரத்தான்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த எவரெஸ்ட் மாரத்தான், நேபாளத்தின் எவரெஸ்ட் பகுதியில் குறைந்த ஆக்சிஜன் அளவு, உறைபனி வெப்பநிலை மற்றும் கரடுமுரடான மலைப் பாதைகள் என மிகக் கடுமையான சூழல்களுக்கு மத்தியில் நடைபெறுகிறது. இது உலகின் மிகவும் கடினமான மாரத்தான் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் இப்போட்டியில் போட்டியாளர்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் நமது உடல் தாங்கும் திறனை மட்டுமல்ல, மன உறுதியையும் சகிப்புத்தன்மையையும் சோதிக்கும் என்கிறார் நௌஷீன் பானு.

கடந்த 2026 மே 29 அன்று, 42.195 கி.மீ முழு மாரத்தான் தூரத்தையும் நான் வெற்றிகரமாகக் கடந்து முடித்தேன். இதன் மூலம், இப்போட்டியில் பங்கேற்ற 254 சர்வதேச விளையாட்டு வீரர்களில் ‘முழு மாரத்தான் பிரிவை நிறைவு செய்த ஒரே இந்தியப் பெண்மணி’ என்ற பெருமையை அடைந்தேன்.

ஆறு வயதில் ஓடத் தொடங்கி உள்ளார். சிறுவயதில் ஒரு பொழுதுபோக்காகச் சாதாரணமாய் ஆரம்பித்த இந்த ஓட்டம், நாளடைவில் எல்லைகளைத் தாண்டிச் சாதிக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், விளையாட்டு மூலம் மற்றவர்களுக்குத் தூண்டுகோலாக இருக்கவும் வழிகாட்டிய ஒரு வாழ்நாள் பயணமாகவே மாறியது என இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உள்ளார் நௌஷீன் பானு.

உலகப் புகழ் பெற்ற ஒரு போட்டியில் இவர் கலந்துகொண்டிருக்கிறார் என்பதை தாண்டி, தமிழ்நாட்டில் இருந்து இந்தப் போட்டியில் கலந்துகொண்ட முதல் மற்றும் ஒரே பெண்மணி இவர் தான். அதுவும் ஒருமுறை அல்ல... மூன்று முறை. இவரை போல, வெல்லக்கூடிய சக்தி உங்களிடமும் இருக்கிறது என்று நெஞ்சை நிமித்தி நில்லுங்கள், பயத்துக்கு எதிர்த்திசையில் விழிப்புணர்வுடன் நீங்கள் செல்ல ஆரம்பிக்கும் போது நீங்கள் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அச்சத்தில் இருந்து விடுபட்டால், வாழ்க்கையை புரிந்து கொள்ளலாம்,வாழ்க்கையை புரிந்து கொள்ளும்போது புதிய வெற்றிகளை பெற முடியும் என்பதுதான் நௌஷீன் பானுவின் வாழ்க்கை நமக்கு சொல்லும் உன்னதப் பாடமாகும்.