Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பங்களாதேஷ் உணவுகள்!

உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கென்றும் சில தனித்துவமான உணவுகள் இருக்கின்றன. தெற்காசியாவில் ஏறக்குறைய சில உணவுகள் பல நாடுகளுக்குப் பொருத்தமான உணவுகளாகவே இருக்கும். நமது அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளும் தங்களுக்கென்று சில பாரம்பரிய உணவுமுறைகளைக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் சில உணவுகளில் ஒற்றுமையான அம்சங்கள் காணப் படும். இதில் பங்களாதேஷில் சில உணவுகள் அப்படி இருக்கின்றன. இருந்தபோதும் அதில் சில மாற்றங்களுடன் செய்யப்பட்டு பகிரப்படுகிறது. பங்களாதேஷ் பொதுவாக இஸ்லாமிய மன்னர்களால் ஆளப்பட்ட பிரதேசம் என்பதால் இங்கு இஸ்லாமியர்களின் உணவுத்தாக்கமே அதிகம் காணப்படும். இதில் பிரியாணி முதன்மையானதாக இருக்கும். அரிசி, இறைச்சி மற்றும் பலவிதமான மசாலாப் பொருட்களால் செய்யப்படும் பிரியாணி அங்கு எப்போதும் ஃபேமஸ். இதில் இறைச்சி பெரும்பாலும் ஆட்டு இறைச்சியாகவோ, மாட்டு இறைச்சியாகவோ இருக்கும். அவை தயிர் அல்லது ரைத்தாவுடன் சுவையாக பரிமாறப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் தோகர் தல்னா என்ற ஒரு உணவு ரொம்பவே பிரசித்தம்.

தக்காளி கொண்டு தயாரிக்கப்பட்ட சாஸில் சமைத்து, அரிசி அல்லது நான் ரொட்டியுடன் இது பரிமாறப்படும். கேக் போலவே காட்சியளிக்கும் இந்த உணவு பங்களாதேஷின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றாகவும் இருக்கிறது. நம்மூரில் சாப்பிடப்படுவதைப்போல பங்களாதேஷிலும் மீன் குழம்புக்கு ஏகப்பட்ட கிராக்கி. இதுவும் தக்காளி சாஸில் சமைக்கப்பட்டு, அரிசி அல்லது நாண் ரொட்டியுடன் பரிமாறப்படுகிறது. காரம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். மீனின் தலை இங்கு மீன் தலைக்கறி என பெயர் வைக்கப்பட்டு ஒரு பிடி பிடிக்கப்படுகிறது. இதையும் தக்காளி சாஸ் கொண்டு தயாரிக்கிறார்கள். மீன் தலை மிதக்கும் இந்த உணவைக் கண்டால் பங்களாதேஷ்காரர்களுக்கு நன்றாக பசியெடுக்கும். இந்தியாவைப் போலவே பங்களாதேஷில் பருப்பு வகைகளும் கோலோச்சுகின்றன. பருப்பு கொண்டு செய்யப்படும் சூப் அவர்களுக்கு அமிர்தம். இதையும் அவர்கள் ஒரு பாரம்பரியமாக பார்க்கிறார்கள். பல்வேறு மசாலாப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பருப்பு சூப் அரிசி உணவிலும், நான் ரொட்டியுடனும் சேர்த்து பரிமாறப் படுகிறது.

பங்களாதேஷில் முள்ளிகடாவுனி என்ற ரெசிபி இருக்கிறது. இது நமது இந்திய வம்சாவளியைக் கொண்ட ஒரு பாரம்பரிய பருப்பு சூப். பல்வேறு மசாலாப் பொருட்களைக் கலந்து அட்டகாசமாக தயாரிக்கப்படும் இந்த சூப் சுவையில் சும்மா அள்ளும். பருப்பு, அரிசிச்சோறு என பல உணவுகள் நம்மூர் சாயலில் இருப்பதைப் போல அங்கு பருகப்படும் பானங்களும் நம்மூரின் வாசம் வீசுவதாக இருக்கும். இங்கு நாம் தயிர், தண்ணீர் மற்றும் சர்க்கரையால் தயார் செய்யப்பட்ட லெஸ்ஸியைப் பருகுகிறோம். அங்கு இந்தக் கலவையுடன் ஏலக்காய் அல்லது ரோஸ்வாட்டரைச் சேர்க்கிறார்கள். இதனால் சுவையுடன் மணமும் கூடுகிறது. லெஸ்ஸியை மாம்பழம் கொண்டும் தயாரிக்கிறார்கள். இதுவும் ஒரு மணமணக்கும் பானமாக இருக்கிறது. டீ என்பது உலகின் பொதுவான பானமாகிவிட்டது. பங்களாதேஷில் மட்டும் இருக்காதா? என்ன? ஆம், அவர்களும் டீ பிரியர்கள்தான். நம்மூரில் குடிப்பதைப்போலவே பால், இஞ்சி, லவங்கப்பட்டை, ஏலக்காய் போன்ற பல்வேறு மசாலாப் பொருட்களைக் கலந்து டீயை அனுபவித்துக் குடிக்கிறார்கள் பங்களாதேஷ்காரர்கள்.