மெக்கே: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், 2வது நாளிலேயே இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்து பழிதீர்த்த ஆஸ்திரேலியா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது. கிரேட் பேரியர் ரீஃப் அரங்கில் நடந்த இப்போட்டியின் முதல் நாளில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் வெறும் 64 ரன்னுக்கு சுருண்டது. ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்திருந்தது. கிரீன் 51 ரன், நாதன் லயன் 10 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். கிரீன் 67 ரன் (165 பந்து, 10 பவுண்டரி), ஹேசல்வுட் 6 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (52.3 ஓவர்). லயன் 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச பந்துவீச்சில் ஷோரிபுல் இஸ்லாம் 15 ஓவரில் 3 மெய்டன் உள்பட 48 ரன்னுக்கு 7 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
தஸ்கின், தைஜுல், மிராஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 146 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 38.3 ஓவரில் 95 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கேப்டன் ஷான்டோ 31 ரன், முஷ்பிகுர் ரகிம் ஆட்டமிழக்காமல் 29 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர் (3 டக் அவுட்).
ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஸ்டார்க் 4, கேப்டன் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். முதல் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்திருந்த ஆஸ்திரேலியா, மெக்கே டெஸ்டில் அதற்கு பழிதீர்த்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை மிட்செல் ஸ்டார்க் தட்டிச் சென்றார்.




