Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சென்னை விமானநிலையத்தில் இயந்திர கோளாறால் பெங்களூர் விமானம் ரத்து: பயணிகள் பரிதவிப்பு

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்றிரவு 8.30 மணியளவில் பெங்களூருக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு செல்ல வேண்டும். இதன்படி, சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 96 பயணிகள் பயணம் செய்யவிருந்தனர். இதனால் அவர்கள் அனைவரும் இரவு 7.30 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வந்து, பாதுகாப்பு சோதனை உள்பட அனைத்தையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். எனினும், அந்த விமானம் 2 மணி நேரம் தாமதமாக, இரவு 10.30 மணியளவில் பெங்களூருக்குப் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்றிரவு 10.30 மணியளவில் ஏர்இந்தியா புறப்படத் தயாரானது. இதில் 96 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் உள்பட 104 பேர் அமர்ந்திருந்தனர். அந்த விமானம் ஓடுபாதையில் ஓடத் துவங்குவதற்கு முன், விமானத்தின் ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதனால் அந்த விமானம் தாமதமாகப் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு, விமானநிலைய ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனர். பொறியாளர்கள், இயந்திர கோளாறை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், அந்த விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திர பழுதை நள்ளிரவு தாண்டியும் பொறியாளர்களால் பழுதை நீக்க முடியவில்லை.

இதற்கிடையே, விமானநிலைய ஓய்வறையில் நீண்ட நேரமாக பெங்களூர் செல்வதற்கு காத்திருந்த பயணிகள், விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து நேற்றிரவு 10.30 மணியளவில் பெங்களூர் செல்ல வேண்டிய ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து என அறிவிக்கப்பட்டது. இதனால், பெங்களூர் செல்ல வேண்டிய 96 பயணிகளும் சென்னை நகர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். அந்த விமானம் பழுது பார்க்கப்பட்டு, இன்று பெங்களூருக்கு மீண்டும் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், ‘அந்த விமானத்தில் ஏற்படும் கடைசி நேர இயந்திரக் கோளாறால் மீண்டும் ரத்து செய்யப்படுமோ என்று பெங்களூர் செல்ல சென்னை விமானநிலையத்துக்கு வந்திருந்த 96 பயணிகளும் பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர். இயந்திரக் கோளாறை தகுந்த நேரத்தில் விமானிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததால், அந்த விமானம் பேராபத்தில் இருந்து தப்பியதுடன், அதில் செல்லவிருந்த 96 பயணிகள் உள்பட மொத்தம் 104 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.