Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

வாழை + வெற்றிலை... தினந்தோறும் பணம் தரும் வெற்றிக்கூட்டணி!

கரூர் மாவட்டத்தில் காவிரி நீர் பாய்ந்தோடி பசுமை வளர்க்கும் ஓர் அழகிய கிராமம் வாங்கல். சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில், ஐநூறுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு விவசாயம்தான் வாழ்வாதாரம். எங்கு பார்த்தாலும் வாழைத்தோட்டங்களும், பல்வேறு பயிர்கள் நிரம்பிய பசுமை வயல்களும் செழித்துக் கிடக்கும். இத்தகைய வெள்ளாமை கிராமத்தில் தனது இருபது வயதில் விவசாயத்திற்கு வந்த விஸ்வநாதன், தொடர்ந்து ஐம்பத்தி நான்கு ஆண்டுகளாக லாபகரமான விவசாயியாக மிளிர்கிறார். பதினைந்து ஏக்கரில் பல வகையான சாகுபடி செய்துவரும் இவரின் விவசாய முறையை அறிந்துகொள்வதற்காக வாங்கல் கிராமத்திற்கு சென்றிருந்தோம். வயலில் வழக்கமான விவசாயப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் நம் வருகையைக் கண்டு அன்போடு வரவேற்று பேசினார்.

``பல தலைமுறைகளாக விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வரும் குடும்பம் எங்களுடையது. இருபது வயதிலிருந்து நானும் விவசாயத்தில் இறங்கிவிட்டேன். எங்கள் பகுதியில் வாழை சாகுபடி அமோகமாக நடக்கும். நானும் வாழை சாகுபடியிலிருந்துதான் எனது விவசாயத்தைத் தொடங்கினேன். இப்போது, வாழையோடு சேர்த்து பதினைந்து ஏக்கரில் பல பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார். ``எனக்கு சொந்தமான பதினைந்து ஏக்கரில் எட்டு ஏக்கரில் வாழை சாகுபடி செய்து வருகிறேன். பூவன், ரஸ்தாலி, கற்பூரவல்லி என பல ரகங்கள் இருக்கிறது. பூவன் வாழையைப் பொருத்தவரை ஒரு ஏக்கருக்கு 950 வாழைகள் நடலாம். ஒருமுறை நட்ட வாழைக்கன்றில் இருந்து, 3 தார்கள் வரை எடுக்கலாம். முதல் தார் சாகுபடி செய்யும் வரை ஒரு வாழைக்கு ரூ.200 செலவாகும். அதே வாழையில் இரண்டாம் தார் எடுக்க ரூ.100 செலவாகும். ஆனால், எங்கள் பகுதியில் ஒரு தார் வாழை 500 வரை விற்பனை ஆகிறது. அதாவது, ஒரு வாழைக்கு ரூ.400 செலவு செய்தால் மூன்று தார்கள் வரை எடுக்கலாம். குறைந்தளவு மூன்று தார்களும் ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. அதுவும் தினமும் வாழை சாகுபடி செய்வதற்காக எல்லாப் பருவத்திலுமான வாழைகள் எனது தோட்டத்தில் இருக்கிறது. இளம் கன்றுகள், மத்திய பருவத்து கன்றுகள், குலை தள்ளும் வாழை என கலவையான கன்றுகளும், மரங்களும் இருப்பதால் தினமும் எனது தோட்டத்தில் இருந்து 20 முதல் 50 வாழைத்தார்கள் விற்பனைக்குச் செல்கின்றன.

அதேபோல, 2 ஏக்கரில் வெற்றிலைக் கொடியும் சாகுபடி செய்து வருகிறேன். வெற்றிலையைப் பொருத்தவரை ஒருமுறை நடவு செய்தால் 4 வருடங்கள் வரை அறுவடை செய்யலாம். ஆனால், வெற்றிலைக்கு பக்குவம் முக்கியமானது. வெற்றிலை வளர்வதற்கு நிழல் அவசியம். அதனால், வெற்றிலையை நடுவதற்கு முன்பாகவே அகத்திச் செடியை நட்டு வைத்து, நான்கு மாதங்கள் அகத்தியை வளரவிடுவேன். பின், அந்த அகத்தி செடியின் அடியிலேயே வெற்றிலையை நடுவேன். அப்படி வளர்கிற வெற்றிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு அறுவடையைத் தொடங்கலாம்.

ஆரம்பத்தில் குறைவாக அறுவடை தரும். பின், கொடி வளர வளர அறுவடையில் அளவை அதிகப்படுத்தலாம். நான் அப்படித்தான் அறுவடை செய்கிறேன். வாரத்திற்கு ஐந்து நாட்கள் வெற்றிலையை அறுவடை செய்து வருகிறேன். இப்போது வெற்றிலைக்கு நல்ல விலை. எல்லாப் பருவத்திலும் வெற்றிலை இருக்கிறது. இன்று ஒரு பக்கம் அறுவடை செய்தால் நாளை வேறு பக்கம் அறுவடை செய்வோம். அந்த வகையில் சுழற்சி முறையில் வெற்றிலையை சாகுபடி செய்து மார்க்கெட்டிற்கு அனுப்புகிறேன்.

வெற்றிலையை நன்றாக பராமரித்தால் நல்ல லாபம் பார்க்கலாம். ஒரு ஏக்கரில் இருந்து நான் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் பார்க்கிறேன். ஆண்டுக்கு 12 லட்சம் வெற்றிலை மூலம் நிச்சய வருமானம். அதில் பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக ரூ.5 லட்சம் வரை செலவாகிவிடும். அதுபோக ரூ.7 லட்சத்தை நிகர லாபமாக பார்க்கலாம். எனது தோட்டத்தில் இருந்து வாழையும், வெற்றிலையும் தினமும் அறுவடையாகி விற்பனைக்குச் செல்கின்றன. அந்த வகையில் விவசாயத்தில் நான் தினமும் வருமானம் எடுத்து வருகிறேன். அதுபோக, பாரம்பரிய நெல் சாகுபடியும் செய்து வருகிறேன். இப்போது தூயமல்லி விதைத்திருக்கிறேன். போன போகத்திற்கு மாப்பிள்ளை சம்பா அறுவடை எடுத்தேன். விளைகிற அரிசியையும் விற்பனை செய்து வருகிறேன். நெல் சாகுபடியைப் பொருத்தவரை இயற்கை முறை சாகுபடிதான். வாழையையும் இயற்கை முறை விவசாயத்திற்கு பழக்கப்படுத்தி வருகிறேன்’’ என்கிறார்.

தொடர்புக்கு:

விஸ்வநாதன்: 98429 28045.

வாழை, வெற்றிலை, தென்னை, நெல் சாகுபடி போக விஸ்வநாதன் தனது தோட்டத்தில் நாவல், தேக்கு, மகோகனி, கொய்யா, சப்போட்டா, பலா, நெல்லி, வாகை, சந்தனமரம், புளியமரம், இலந்தை, மா என பலவிதமான மரங்களையும் சாகுபடி செய்து வருகிறார்.