ரூ.22,000 கோடி கடனுக்கு ரூ.6.5 கோடி சுபாஷ் சந்திரா கடனை செலுத்தும் உத்தரவில் பின்வாங்கிய தீர்ப்பாயம்: சொத்துக்களை விற்க, மாற்ற தடை
புதுடெல்லி: தொழிலதிபர் சுபாஷ் சந்திரா வாங்கிய ரூ.22,006 கோடி கடனுக்கு ஈடாக ரூ.6.5 கோடி செலுத்தினால் போதும் என்ற உத்தரவுக்கு கடன் வழங்குநர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து சுபாஷ் சந்திரா அவரது சொத்துக்களை விற்கவோ, பெயர் மாற்றதோ தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) தடை விதித்துள்ளது. எஸ்ஸெல் குழும தலைவர் சுபாஷ் சந்திரா வாங்கிய ரூ.22,006 கோடி கடனுக்கு அவரது தனிப்பட்ட சொத்துக்களில் இருந்து ஈடாக ரூ.6.5 கோடியை மட்டும் கடன் வழங்குநர்களுக்கு திருப்பி செலுத்த தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கடந்த 25ம் தேதி ஒப்புதல் அளித்தது.
இது நாடு முழுவதும் பெரும் பேசுபொருளானது. மேலும், கடனில் 99.9 சதவீத தொகை தள்ளுபடியை எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், கனரா வங்கி மற்றும் யூனியன் வங்கி உள்ளிட்ட கடன் வழங்குநர்கள் ஏற்க மறுத்தனர். இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.6.5 கோடி கடன் தீர்வு திட்டத்திலிருந்து என்சிஎல்டி தற்போது பின்வாங்கி உள்ளது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி அனுபிந்தர் சிங் கிரேவால் தலைமையிலான 4 பேர் கொண்ட சிறப்பு அமர்வு நேற்று பிறப்பித்த புதிய உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் எங்கள் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. எனவே இதுவரை எந்த இறுதி உத்தரவையும் நடைமுறைப்படுத்த முடியாது. அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் தரப்பு வாதங்கள் கேட்கப்படும். அதுவரை சுபாஷ் சந்திரா நேரடியாகவோ மறைமுகமாகவோ சொத்துக்களை விற்கவோ பெயர் மாற்றவோ கூடாது’’ என தடைவிதித்துள்ளது.



