Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

நாடு முழுவதும் 56% வாகனங்கள் காப்பீடு இல்லாமல் ஓடுவதால்; இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: காப்பீடு செய்யப்படாத வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்க தடை விதிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி யோசனை தெரிவித்துள்ளது. இந்திய சாலைகளில் இயங்கும் வாகனங்களில் காப்பீடு (இன்சூரன்ஸ்) இல்லாத வாகனங்களால் விபத்தில் சிக்குபவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதைத் தடுக்கும் வகையில், காப்பீடு செய்யப்படாத வாகனங்களுக்கு பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்ப அனுமதி மறுக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக யோசனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘சாலைகளில் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்கள் இயங்குவதைக் கட்டுப்படுத்தவும், நெடுஞ்சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அத்தகைய வாகனங்களைக் கண்டறிந்து உரிமையாளர்களுக்கு நேரடியாக ‘சல்லான்’ அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினர்.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மொத்த 30.4 கோடி வாகனங்களில் சுமார் 56 சதவீதம் அதாவது 16.5 கோடி வாகனங்கள் காப்பீடு செய்யப்படாமல் இயங்கி வருவதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்களாகும். மேலும், அரசு தரவு புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளில் 22 சதவீதம் காப்பீடு இல்லாத வாகனங்கள் சம்பந்தப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 146ன்படி, செல்லுபடியாகும் மூன்றாம் நபர் காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது குற்றமாகும். இதற்காக முதல் முறை தவறு செய்பவர்களுக்கு 3 மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது 2,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். மீண்டும் அதே தவறைச் செய்தால் 3 மாதம் வரை சிறை அல்லது 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

காப்பீடு விவகாரத்தை முறைப்படுத்த காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு வாரியம் (ஐஆர்டிஏஐ), சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து பைலட் திட்டத்தை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, வாகனத்தின் இன்சூரன்ஸ் நிலையுடன் எரிபொருள் வழங்குவதை இணைக்க வேண்டும். இன்சூரன்ஸ் இல்லை என்றால் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் மறுக்கப்படும். இதற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமும் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மாநில போக்குவரத்து போலீசார் பயன்பாட்டிற்காக வாஹன் போர்ட்டல் மற்றும் இன்சூரன்ஸ் தகவல் பணியகத்தின் தரவுகளுடன் இணைக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் செயலிகள் வழங்கப்பட வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள ஏஎன்பிஆர் கேமராக்கள் மூலம் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு தானாகவே ‘இ-சல்லான்’ அனுப்பப்படும்.

முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு புதிய கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், புதிய இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் கட்டாய மூன்றாம் நபர் காப்பீடு பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இன்னமும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் காப்பீடு செய்யப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அமர்வு, இந்த கால அளவை மேலும் ஒரு ஆண்டு உயர்த்தியுள்ளது. அதன்படி, இனிமேல் புதிய கார் வாங்குபவர்கள் 4 ஆண்டுகளுக்கும், புதிய பைக் வாங்குபவர்கள் 6 ஆண்டுகளுக்கும் கட்டாயமாக மூன்றாம் நபர் காப்பீடு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவை தொடர்ந்து காப்பீடு செய்யப்படாத வாகனங்களுக்கு பங்குகளில் எரிபொருள் வழங்க தடை விதிக்கும் நடைமுறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.