மேட்டூர்: கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,988 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது. ஒனேக்கல்லில் இன்று 2வது நாளாக அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் தடை நீடிக்கிறது.
கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் பெய்த கனமழையால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர் நேற்று அதிகாலை ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று காலை 8,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து மாலை 6 மணிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், இன்று காலை நீர்வரத்து 18000 கனஅடியாக சற்று குறைந்துள்ளது. அங்கு அருவி மற்றும் ஆற்றில் புதுவெள்ளம் பாய்வதால் இன்று 2வதுநாளாக அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் சவாரிக்கும் தடை நீடிக்கிறது. பிலிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வரும் நீரின்அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கபினியில் திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 11,988 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்திறப்பை விட வரத்து பலமடங்கு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு உயர தொடங்கி உள்ளது. நேற்று காலை 73.02 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 74.01 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 36.24 டிஎம்சியாக உள்ளது. இதனிடையே கபினியில் இருந்து இன்று காலை நிலவரப்படி நீர்திறப்பு 27 ஆயிரம் கனஅடியாக நீடித்தது. அணைக்கு நீர்வரத்து 22,256 அடியாக இருந்த நிலையில் அதைவிட அதிகமாக நீர்திறக்கப்படுகிறது.


