டிஎன்பிஎல் தொடரின் 2வது குவாலிபயரில் 184 ரன் என்ற இலக்கை துரத்திய திருச்சி அணிக்கு முதல் ஓவரிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. தீபன் லிங்கேஷ் வீசிய முதல் ஓவரின் முதல் 3 பந்தில் ராஜ்குமார், ஷியாம் சுந்தர், ஜெகன்னாதன் கவுஷிக் ஆகியோர் கோல்டன் டக் அவுட்டாகி நடையைக் கட்ட, திருச்சி அணி பூஜ்ஜியம் ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.
லிங்கேஷ் ஹாட்ரிக் சாதனை திருச்சிக்கு மீள முடியாத சோதனையாக வேதனையாக மாறியது, முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கேற்ப அடுத்து வந்த சஞ்சய் யாதவ் 1, ஜாபர் ஜமால் 0... என கிராண்ட் சோழாஸ் வீரர்கள் உள்ளே வெளியே அணிவகுப்பு நடத்தினர். ஒரு முனையில் கடுமையாகப் போராடிய கேப்டன் சுரேஷ் குமார் மட்டும் 48 ரன் (27 பந்து, 9 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினார்.



