Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

உருண்டைக்குழம்பு!

சமகால தலைமுறையினர் இழந்து போன பாரம்பரிய உணவுகளுள் ஒன்று ‘பருப்பு உருண்டைக் குழம்பு’. மிக ருசியான இந்தப் பதார்த்தத்தை, ரசித்து ருசிக்கும் தலைமுறை வெகுவாக அருகிவருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது உருண்டைக் குழம்பு என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் கட்டுரை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பதார்த்தத்தின் ஸ்பெஷலே பருப்பு உருண்டைதான். பருப்பு உருண்டையை மிகவும் பதமாகத்தான் தயாரிக்க வேண்டும்.

உருண்டைக்கான கச்சாப்பொருளான கடலைப் பருப்பை மிக்ஸியில் அரைத்தால் அதிலேயே பாதி ருசி போய்விடும். எனவே சிரமப்பட்டு உரலில் கொர கொரவென்று அரைத்துக் கொள்வதுதான் இதைச் சரியாக செய்வதற்கான முதல் தகுதி. சரி.. இப்போதெல்லாம் உரல், அம்மி போன்ற சமாச்சாரங்கள் காணாமல் போய்விட்டதால் மிக்ஸியிலேயே இதை தயார் செய்ய முயல்வோம். இதில் வரும் குழம்பு தண்ணீராக இல்லாமல் சற்று கெட்டியாக இருக்க வேண்டும். அப்போதுதான் ருசி தூக்கலாக இருக்கும். குறிப்பாக உருண்டையைக் குழம்பில் வேகவிடும் பக்குவம் முக்கியமானது. அது மினி சைஸ் பாறாங்கல்லாக ஆகிவிடக்கூடாது. அதே சமயத்தில் குழம்பைக் கிளறினால் அதிலேயே கரைந்து உதிர்ந்து, குழம்பிலேயே உருண்டை ஐக்கியமாகி விடக்கூடாது.

இது முக்கியம். ஆக நடுவாந்திர நிலையில் உருண்டை கச்சிதமான பக்குவத்தில் இருப்பது முக்கியம். இந்த உருண்டைக் குழம்பிற்கு தனியாக சைட்டிஷ் செய்து எல்லாம் சிரமப்படத் தேவையில்லை. சோற்றில் குழம்பை ஊற்றிக் கொண்டு உருண்டையை தட்டில் ஓரம் கட்டி சைடிஷ் ஆக வைத்துக் கொண்டாலே போதும். ஒரு சட்டி சோற்றை உருண்டை உருண்டையாக தின்று தீர்த்து விடலாம். அதாவது ‘டூ இன் ஒன்’ உணவு வகை இது.சுடச்சுட சோற்றில் குழம்பை ஊற்றி உருண்டையை கடித்துக் கொண்டே சாப்பிடுவது ஒருவகையான ருசி என்றால், மறுநாள் இதே குழம்பை இட்லி அல்லது தோசையுடன் கலந்து அடிப்பது இன்னொரு வகையான ருசி. சூடாக இருக்கும்போது ஒரு அனுபவத்தைத் தருகிற இந்தக் குழம்பு, மறுநாள் வேறு வகையான அனுபவத்தைத் தரும்!

- சுரேஷ் கண்ணன்.