பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு முதல்வர் ஆறுதல்: சட்டத்தின் முன்பு குற்றவாளிகள் நிறுத்தப்படுவர் என உறுதி
இந்த வழக்கில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டு, போலீஸ் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக தூக்கியடிக்கப்பட்டார். அவருக்குப் பதில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதேநேரத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி மரியாதைக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் அரசின் சார்பில் செய்து தரப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொத்தூரில் கடந்த 7ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை, அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து, தனது ஆழ்ந்த அனுதாபத்தினையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், படுகொலை வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்த கொடுங் குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதன்பின்னர் முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, அவரது இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி பொற்கொடி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தேன். மேலும், இந்த கொலை பாதக செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டைனையை பெற்று தருவோம் என சகோதரி பொற்கொடிக்கு உறுதியளித்தேன். கொலை குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. இது அனைவருக்குமான அரசு, அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும். காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும். இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.