Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்காவின் 85 ராணுவ முகாம் மீது ஈரான் குண்டுவீச்சு: வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் தீவிரம்

டெஹ்ரான்: அமெரிக்காவின் 85 ராணுவ முகாம்களை ஈரான் தாக்கியதால் வளைகுடா பகுதியில் பெரும் போர் பதற்றம் உருவாகியுள்ளது. வளைகுடா பகுதியில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற வணிக எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த சில நாட்களுக்கு முன் ட்ரோன் தாக்குதல்கள் நடந்தன. இதற்கு பதிலடியாக, ஈரானில் உள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் படகுகள், கடலோர ரேடார் தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட 85 இலக்குகள் மீது அமெரிக்காவின் சென்ட்காம் எனப்படும் மத்திய கட்டளைப்பிரிவு துல்லியமான ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதலால், கடந்த ஜூன் 17ம் தேதி அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்படுத்தப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முற்றிலுமாக முறிந்தது. அத்துடன், சர்வதேச சந்தையில் ஈரான் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்காக அமெரிக்கா வழங்கியிருந்த பொது உரிமத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்ததால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதற்கு முதற்கட்ட பதிலடி கொடுக்கும் வகையில், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள 85 அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதுடன், அமெரிக்காவின் எம்.கியூ-9 ரீப்பர் ரக ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இன்று அறிவித்துள்ளது.

ஈரானின் கடற்படை மற்றும் விண்வெளி படை இணைந்து நடத்திய இந்த தாக்குதலில், பஹ்ரைனின் சல்மான் துறைமுகம், 5 கடற்படை பிரிவு மற்றும் குவைத்தின் அலி அல் சலீம் விமானப்படை தளம் ஆகிய முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டன. இந்த தாக்குதலின் போது இரு நாடுகளிலும் அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், ‘இந்த தாக்குதலால் அமெரிக்க தரப்பில் உடனடியாக எந்த உயிரிழப்போ அல்லது ராணுவ தளங்களுக்கு பெரிய அளவிலான கட்டமைப்பு சேதங்களோ ஏற்பட்டதாக அறிக்கை எதுவும் வரவில்லை’ என்று தெரிவித்தார். இருப்பினும், தென் ஈரான் வான்பரப்பில் அமெரிக்க ட்ரோனை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.