Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய குறைந்த வட்டியில் கடன்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக 2024-25ம் நிதியாண்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடன் பெற விண்ணப்பதாரர் விண்ணப்பம் செய்ய வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.15லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 லட்சம் வரை 7 சதவீதம் மற்றும் ரூ.1.25 லட்சம் முதல் ரூ.15லட்சம் வரை 8 சதவீதமாகும். குழுக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் சிறுதொழில், வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதம் பூர்த்தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலர் அவர்களால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர். இரு பாலருக்கான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் கடனுதவி வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ. 60,000 வரை கடனுதவி வழங்கப்படும். இதன் ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். இக்கழகத்தின் http://www.tabcedco.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.