Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனைத்து பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் ரூ.10 கோடியில் சிசிடிவி கேமராக்கள்: அமைச்சர் தகவல்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது: இன்றைக்கு விடுதிகளில் தங்கிப் படிக்கின்ற சுமார் 78,716 கல்லூரி, பள்ளி மாணவச் செல்வங்களின் நலனைக் கருத்திற் கொண்டு, பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு அரசு வழங்கும் உணவுச் செலவினம் மாதம் ரூ.1,000 என்பதை ரூ.1,400 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கான உணவுச் செலவினம் ரூ.1,100 என்பதை ரூ.1,500 ஆகவும் உயர்த்தித் தந்தவர் முதல்வர்.

இந்த 4 ஆண்டுக் காலத்தில் 12 விடுதிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள், 645 பழுதடைந்த கட்டிடங்களை மராமத்து செய்வதற்காக கிட்டத்தட்ட ரூ.63 கோடி, 36 பள்ளி விடுதிகளைக் கல்லூரி விடுதிகளாகத் தரம் உயர்த்தித் தந்து மேலும் இந்த ஆண்டு 10 விடுதிகளை தரம் உயர்த்தியுள்ளோம். அதோடுமட்டுமல்ல, இந்த 275 கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகத்தை முதல்வர் உருவாக்கித் தந்திருக்கிறார். இந்த ஆண்டு ரூ.10 கோடியே 60 லட்சம் செலவில் தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து விடுதிகளையும் கண்காணிக்கின்ற வகையில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கின்ற பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில், இதுவரை 2,170 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயன்பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறை மூலமாக சுமார் ரூ.178 கோடி கல்விக் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது. 2021ல் முதல்வராக பொறுப்பேற்ற உடன் மருத்துவப் படிப்புகள் அல்லாத பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய துறைகளைச் சார்ந்த உயர் படிப்புகளுக்கும் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டினை விரிவுபடுத்தினார். அதன் அடிப்படையில் மொத்தம் 40,631 மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.

அவர்களின் கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களுக்காகவும் முதல்வரால் வழங்கப்பட்ட தொகை ரூ.911 கோடி. வன்னியர்குல சத்திரியர் பொது அறநிலையப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலக் கொடைகள் வாரியத்திற்கென்று தனியாக சொந்தக் கட்டிடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த ஆண்டே அற்கான புது கட்டிடம் கட்டப்படும். இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டில் தான் பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிகமாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம், கலைஞர் 1989ல் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டை, வேலைவாய்ப்பிலே உருவாக்கித் தந்ததனால் கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் பேசினார்.