தர்மபுரி: கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் சுலைமான் (35). சாப்ட்வேர் இன்ஜினியரான இவரது மனைவி ரஷியா பானு (25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகிறது. 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், ரஷியா பானு மீண்டும் கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அவர், பெற்றோர் வீடான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டிக்கு வந்தார். அங்கிருந்து கடந்த 28ம் தேதி மாமியார் கிருன்நிஷா மற்றும் கணவன் சுலைமான் ஆகியோருடன் திருப்பூருக்கு புறப்பட்டார். சென்னையிலிருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்ய ஆயத்தமாகினர். மாலை 5.50க்கு வந்து சேர வேண்டிய ரயில், 3 மணி நேரம் தாமதமாக 8.50 மணிக்கு சாமல்பட்டி வந்தடைந்தது. சுலைமான் குடும்பத்தினர் பொதுப்பெட்டியில் ஏறினர்.
பொம்மிடி நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ரஷியா பானுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த ஆண்கள் எழுந்து வேறு இடம் சென்றனர். தொடர்ந்து பெண்கள் ஒன்றாக சேர்ந்து சேலைகளை சுற்றி தடுப்பு ஏற்படுத்தினர். அப்போது, காவி உடை அணிந்த சாமியார் போன்ற தோற்றத்தில் இருந்த பெண் ஒருவர் வந்து, திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த சிவ சீதாலட்சுமி என அறிமுகம் செய்து கொண்டு பிரசவம் பார்த்துள்ளார். இதில், ரஷியா பானுவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த ரயில் பொம்மிடி நிலையம் வந்து சேர்ந்தது. தகவலறிந்து அந்த ரயிலில் பயணம் செய்த சிறப்பு மருத்துவ நிபுணர் குமரேசன் என்பவர் பிரசவம் நடந்த பெட்டிக்கு விரைந்து சென்று குழந்தையின் தொப்புள் கொடியை அகற்றிவிட்டு, மருத்துவ உதவிகள் செய்தார். மேலும், தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் தாய்-சேய் ஆகியோரை ஏற்றி பொம்மிடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது, அவர்கள் நலமாக உள்ளனர். உதவி செய்த சகபயணிகள், காவி உடை அணிந்த பெண்ணுக்கும், மருத்துவருக்கும், சுலைமான் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

