ஆழ்வார்குறிச்சி அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.பல லட்சம் பொருள் எரிந்து நாசம்
கடையம்: தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள பூவன்குறிச்சி என்ற கிராமத்தில் நெல்லை மாவட்டம் வி.கே. புரத்தைச் சேர்ந்த செய்யது அலி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளி) அதிகாலை இந்த பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது, கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மள மளவென பரவியதால் உடனடியாக ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் முதலில் அம்பை தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்திலும் தீப்பற்றி எரிந்ததால் கூடுதலாக சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
வீரர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தீ கட்டுக்குள் வராததால் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியை சுற்றி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த தீ விபத்தில் கம்பெனியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி நாசமானது.
இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.