Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம் முக்கிய குற்றவாளி அவினாஷ் சுக்லா: சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் காணிக்கை திருடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், அவினாஷ் சுக்லா முக்கிய குற்றவாளியாக சிறப்பு புலனாய்வு குழுவின் முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைத்தது. இக்குழு, கோயிலின் காணிக்கையை எண்ணும் அறையின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் பல முறைகேடுகள் அம்பலமாகின.

காணிக்கை எண்ணும் பணியின் போது, பக்தர்களின் பல லட்ச ரூபாய் காணிக்கையை திருடியதாக ஊழியர்கள் அவினாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, மனிஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராம சங்கர் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவாஸ்தவா மற்றும் ராம சங்கர் (எ) டின்னு ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அவினாஷ் சுக்லா தான் முதல் குற்றவாளியாக சிறப்பு புலனாய்வு குழு அடையாளம் கண்டுள்ளது.

கடந்த மாதம் 23ம் தேதி உத்தரப் பிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) சஞ்சய் பிரசாத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட 9 பக்க அறிக்கையில், 30 வயதான சுக்லாதான் இந்த விசாரணையின் மையப்புள்ளி என்று விவரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோயிலில் பக்தர்களின் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த சுக்லாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுமார் 40 நாட்களில் கோயில் பணம் எண்ணும் அறையிலிருந்து 70 முறை பணம் திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளன.

சிசிடிவி கேமரா காட்சிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில், பணம் எண்ணும் பணியின்போது சுக்லா பலமுறை நன்கொடைப் பணக் கட்டுகளையும் சில்லறை நோட்டுகளையும் எடுத்து மறைத்து வைத்தது தெரியவந்ததுள்ளது.  அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா மற்றும் கருணேஷ் பாண்டே ஆகியோர் நன்கொடைப் பணத்தை மறைத்து வைப்பதிலும் எடுத்துச் செல்வதிலும் சுக்லாவுக்கு உதவியதையும், மனிஷ் குமார் யாதவ் பணம் எண்ணும் அறைக்குள் அவருடன் இணைந்து செயல்பட்டதையும் சிசிடிவி காட்சிகள் காட்டுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தி காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது, சுக்லாவின் வீட்டில் இருந்து ரூ. 20.39 லட்சம் ரொக்கம், 1,121 அமெரிக்க டாலர்கள், தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்கள், பிற மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் ஒரு எஸ்யூவி வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. ஏற்கனவே கைதான 5 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்த நிலையில், புதிய ஆதாரங்களின்படி நேற்று அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா மற்றும் கருணேஷ் பாண்டே ஆகியோரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதற்கிடையில், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகி மற்றும் சிறப்பு அழைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட கோபால் நாகரகட்டே என்கிற கோபால் ராவ், கோயில் வளாகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த தங்குமிடத்தைக் காலி செய்துவிட்டு கார்சேவக் புரத்திற்கு குடிபெயர்ந்ததாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. கோயில் வளாகத்திற்குள் தடையின்றி நுழைவதற்காக அவருக்கு வழங்கப்பட்டிருந்த கார் அனுமதி அட்டையையும் அவர் திரும்ப ஒப்படைத்ததாக அவர்கள் கூறினர்.

* பத்ரிநாத் கோயில் ஊழியர் மீது வழக்குப்பதிவு

அயோத்தி ராமர் கோயிலைப் போல, உத்தரகாண்டின் பத்ரிநாத் கோயிலில் நன்கொடைகளைக் கையாள்வதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, ஸ்ரீபத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் தலைவரின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய பிரமோத் நவுட்டியால் மீது போலீசார்வழக்கு பதிவு செய்துள்ளனர்.