Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விழிப்புணர்வு முக்கியம்

தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்வை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தி மோசடிகள் செய்யும் கும்பலின் அபாயமும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் அப்பாவி மக்களை குறிவைத்து ஆன்லைனில் பணம் பறிக்கும் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதுபோன்ற மோசடிகளின் உச்சமாக இருப்பது டிஜிட்டல் கைது மோசடி.

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளைபோல பேசி, பொதுமக்களை வீட்டில் சிறைபிடித்து வைத்து பணம் பறிப்பதே இந்த மோசடியின் முக்கிய உத்தியாக உள்ளது. இதுபோன்ற டிஜிட்டல் கைதுகளால் இந்தியர்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர் என்று தரவுகள் கூறுகிறது. கடந்த 2022 முதல் 2024ம் ஆண்டு வரை மட்டும் இதுதொடர்பாக 1 லட்சத்து 23 ஆயிரம் வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் என்றும் ஒன்றிய அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் இதுவரை 3 மோசடிகள் குறித்த வழக்குகள் இந்தியாவில் அதிகளவில் பதிவாகியுள்ளது. முதலீட்டு மோசடிகள், டிஜிட்டல் கைது மோசடிகள், பாஸ்மோசடிகள் என்று இது வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் மோசடியில் மட்டும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி பெரும்பாலும் நிதி இழப்புகளையே ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது உயிரிழப்புக்கும் வழிவகுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஓய்வு பெற்ற 83 வயது அரசு அதிகாரி ஒருவர், இதற்கு பலியாகி உள்ளார்.

டிஜிட்டல் மோசடியில் ரூ.1.2 கோடி பணத்தை இழந்த அதிர்ச்சியில், அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.  இப்படி அதிகரித்து வரும் மோசடிகளுக்கு பலவீனமான வங்கி பாதுகாப்புகள் மற்றும் மோசமான பணமீட்பு போன்றவையும் ஒரு காரணம். டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகளில் உள்ள ஒழுங்குமுறை இடைவெளிகளையும் இது அம்பலப்படுத்துகிறது. இந்த மோசடியில் அனைத்து தரப்பு மக்களும் சிக்கிக் கொள்கின்றனர்.

ஆனாலும் அதிகம் படித்தவர்கள், அதிகாரத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களே அதிகம் சிக்குகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவித்திருப்பது வேதனைக்குரியது. இதில் மோசடி செய்பவர்களை கண்காணித்து பிடிப்பதும் சட்டஅமலாக்கத்திற்கு சவாலாக உள்ளது. இது முதலில் கண்மூடித்தனமான மற்றும் தேவையற்ற ஆன்லைன் மோசடி அழைப்புகளுடன் தொடங்குகிறது. இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அவசரகால சூழ்நிலையை உருவாக்கி பணம் செலுத்தும்படி கேட்பார்கள்.

எனவே ஒரு அதிகாரி என்ற பெயரில் அழைப்பு வந்தால் உடனடியாக அவர்களது அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். அவர்கள் கொடுத்த எண்களை பயன்படுத்தக்கூடாது. அதிகாரப்பூர்வ தொடர்பு எண்களை தனித்தனியாக தேடி மீண்டும் அழைக்கலாம். ஓடிபி எண்களை வழங்ககூடாது. இவை அனைத்திற்கும் மேலாக தாமதம் காட்டாமல் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும். ஆக மொத்தத்தில் டிஜிட்டல் கைது என்னும் நவீன அரக்கனின் பிடியில் இருந்து மீள்வதற்கு மக்களிடம் பெரும் விழிப்புணர்வு பரவலாக வேண்டும் என்பதே மிகவும் முக்கியம்.