Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் ஆஸ்திரேலிய பிரதமர்

கான்பெரா: நிகழ்ச்சி ஒன்றில் நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கடும் எதிர்ப்புக்கு பின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிதிச் சேவை நிபுணரான ஹெய்டனை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (61) திருமணம் செய்து கொண்டார். இவர் சமீபத்தில் நிக்கி ஆஸ்போர்ன் என்ற நகைச்சுவை கலைஞர் நடத்திய ‘புஷ் டீப்’ என்ற ஒலிப்பதிவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் ஆஸ்திரேலியாவின் பிரபல பாடகியும் நடிகையுமான கைலி மினோக், மற்ற நடிகைகள் நிகோல் கிட்மேன், ரோண்டா பர்ச்மோர் ஆகிய மூவரில் யாரை திருமணம் செய்வீர்கள், யாருடன் பழகுவீர்கள், யாருடன் உடலுறவு கொள்வீர்கள் என்று விளையாட்டாக கேள்வி கேட்கப்பட்டது.

ஆரம்பத்தில் இதற்கு பதிலளிக்க மறுத்த பிரதமர், பின்னர் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால் கைலி மினோக்கை தேர்வு செய்து, ‘அவர் மிகவும் அற்புதமானவர்’’ என்று பதிலளித்தார். மேலும், தனது தாம்பத்திய வாழ்க்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனக்கு பிடித்த சவுத் சிட்னி ரக்பி விளையாட்டு அணி வெற்றி பெறுவதற்கு காரணம், பாலுணர்வைத் தூண்டும் ஆட்டம் தான் காரணம் என்று சிரித்துக்கொண்டே கூறினார். பிரதமரின் இந்த கருத்துக்கள் ஆபாசமானவை என்றும், அவரது பதவிக்கு தகுதியற்றவை என்றும் கூறி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சர்ச்சை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தனது பேச்சுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதே நேரத்தில், ஆளும் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.