Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிர்ப்பு அமைச்சர் நிதின் கட்கரி வீட்டை முற்றுகையிட முயற்சி: காங். போராட்டத்தால் நாக்பூரில் பரபரப்பு

நாக்பூர்: எத்தனால் கலந்த எரிபொருள் விவகாரம் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் கட்கரியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் இ20 பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் பழுதடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இ20 பெட்ரோலுக்கு கார், இரு சக்கர வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விரும்புபவர்களுக்கு எத்தனால் கலக்காத பெட்ரோல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் எத்தனால் கலந்த எரிபொருளுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் சார்பில் மகாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. மகால் பகுதியில் உள்ள சிட்னிவிஸ் பூங்கா சதுக்கத்தில் இருந்து அதே பகுதியில் உள்ள அமைச்சர் நிதின் கட்கரியின் வீடு வரை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இ20 எரிபொருள் பயன்பாட்டின் சாத்தியமன்ற தன்மை குறித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியனர் முழக்கங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் அமைச்சரின் வீட்டை முற்றுகையிடுவதற்கு முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புக்களை தாண்டி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து பிடித்து வைத்தனர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பல மாதங்களாகவே நாடு முழுவதும் உள்ள நுகர்வோரும் மெக்கானிக்குகளும் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர். மைலேஜ் குறைதல், இன்ஜின் செயல்திறன் சிக்கல்கள், வாகனங்களில் எத்தனால் கலந்த எரிபொருளின் நீண்டகால தாக்கம் குறித்த கவலைகள் உட்பட பல பரவலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

* பிரதமர் வீடு நோக்கி கெஜ்ரிவால் பேரணி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால்,‘‘பொதுமக்களால் கையெழுத்திடப்பட்ட மனுக்களை நேரில் ஒப்படைக்கவும், எத்தனால் கலந்த பெட்ரோல் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் நான் நாளை(இன்று) 100 பேருடன் பிரதமரின் இல்லத்துக்கு செல்வேன். வாகனங்களில் பல்வேறு சிக்கல்களை மக்கள் எதிர்கொண்ட போதிலும் அரசு இதனை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. இதன் மூலம் இதில் ஏதோ ஒரு முறைமுக நோக்கம் இருப்பது தெளிவாகிறது. அமெரிக்காவில் இருந்து எத்தனால் வாங்குமாறு பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழுத்தம் கொடுப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்” என்றார்.