Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாடியில் இருந்து தள்ளிவிட்ட முயற்சி தோல்வி; மருத்துவமனையில் கணவருக்கு ஆசிட் ஊசி போட்டு கொன்ற நர்ஸ்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்

நிஜாமாபாத்: தெலங்கானாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மாடியில் இருந்து தள்ளிவிட்டுக் கொல்ல முயன்று தோற்றதால், மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த போது நரம்பு வழி மருந்து செலுத்தும் குழாயில் ஆசிட்டை ஊசி மூலம் செலுத்தி செவிலியர் கொலை செய்துள்ளார். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பெண் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் வளைகுடா நாட்டில் இருந்து அண்மையில் ஊர் திரும்பிய இவரது கணவர் பிரசாந்த் என்பவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.

இதற்கு சந்தியாவிற்கும், அதேபகுதியை சேர்ந்த அனில் என்பவருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பே காரணம் என்று கூறப்படுகிறது. தங்களின் கள்ளக்காதலுக்கு பிரசாந்த் இடையூறாக இருப்பதாக கருதிய சந்தியா, கள்ளக்காதலன் அனில் மற்றும் அவரது நண்பர் வெங்கட் சாய் ஆகியோருடன் இணைந்து பிரசாந்தைக் கொலை செய்ய திட்டமிட்டார். இதன்படி, பிரசாந்திற்கு மது ஊற்றிக் கொடுத்து மயக்கமடையச் செய்த பின்னர், அவரை வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். ஆனால் படுகாயங்களுடன் பிரசாந்த் உயிர் பிழைத்துக் கொண்டதால், குடிபோதையில் தவறி விழுந்துவிட்டதாக அவரிடம் பொய் கூறி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் பிரசாந்திற்கு நரம்பு வழியாக மருந்துகள் செலுத்தப்பட்டு வந்தன. அப்போது அங்கு வந்த செவிலியர் சந்தியா, தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி பிரசாந்தின் மருந்து செலுத்தும் குழாயில் கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை ஊசி மூலம் செலுத்தியுள்ளார். இதனால் பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் அடைந்த பிரசாந்தின் தாய், கடந்த 1ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த கொடூர சதி அம்பலமானதை அடுத்து சந்தியா, கள்ளக்காதலன் அனில், நண்பர் வெங்கட் சாய் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், ‘முதலில் மாடியில் இருந்து தள்ளிவிட்டுக் கொல்ல முயன்றதும், அது தோல்வி அடைந்ததால் மருத்துவமனையில் விஷத்தன்மை கொண்ட ஆசிட்டை செலுத்தி கொலை செய்ததும் விசாரணையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.