Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பள்ளிவாசல்கள் மீது தொடர் தாக்குதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எங்கே? தவெக அரசுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை:

சென்னை கோயம்பேடு ஜெய்நகர் பகுதியில் உள்ள மஸ்ஜித்-இ-ஷா நூர் பள்ளிவாசலுக்குள் புகுந்த ஒரு நபர் அங்கு பணியிலிருந்த இமாமை தாக்கி, பள்ளிவாசல் பொருட்களை சேதப்படுத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கடந்த அக்டோபர் 14ம் தேதி சென்னை வடபழனி கங்கை அம்மன் கோயில் தெருவில் உள்ள பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது ஜெய்நகர் பள்ளிவாசலில் மற்றொரு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய சம்பவங்களை தனித்தனி நிகழ்வுகளாக மட்டும் கருதிவிட்டு, விவகாரத்தை முடித்துவிட முடியாது. தாக்குதல்களின் பின்னணி, நோக்கம், திட்டமிடல் மற்றும் சாத்தியமான தொடர்புகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பள்ளிவாசல்களுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு சிலருக்கு துணிச்சல் தவெக ஆட்சியில் ஏற்படுவது ஏன்? இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இந்த கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும்.

ஜெய்நகர் பள்ளிவாசல் தாக்குதலில் கைது செய்யப்பட்ட நபர் மீது, விசாரணையில் வெளிப்படும் ஆதாரங்கள் மற்றும் சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமல் தடுப்பதற்கான அவசியம் கருதி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அவரை காவலில் வைக்க காவல்துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் எந்த மதத்தினரின் வழிபாட்டுத்தலமாக இருந்தாலும் அதன் பாதுகாப்பில் சமரசம் இருக்கக் கூடாது. பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதை தடுக்க தமிழக அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.