Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீண்டும் அக்கிரமம்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் தொடக்கத்திலேயே தமிழகத்தில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கோயம்புத்தூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் மக்கள் நிம்மதியை இழந்து வருகின்றனர். வளர்ச்சி திட்டங்களுக்கு கால அவகாசம் கேட்பது நியாயமாக இருக்கலாம். ஆனால் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம் என்பதை முதல்வர் ஜோசப் விஜய் எப்போது உணரப்போகிறார். சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலர், சங்கரன்கோவில் அருகே 10ம் வகுப்பு மாணவி, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9 வயது மாணவி என 2 நாட்களில் 8 பேர் பாலியல் ரீதியான தொந்தரவுக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கும்மிடிப்பூண்டியில் பச்சிளம் குழந்தை காம வெறியர்களால் சிதைக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலமும் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டித்துள்ளார். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் தமிழ்நாட்டில் அதிகரித்து உள்ளதாக தவெகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மனித நேயத்தையும் உலுக்கி உள்ளது. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அநாகரீகமான, கொடூரமான குற்றச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

`பொறுப்பு’ என்னும் சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கூறியுள்ளார். சட்டம்-ஒழுங்கு சரிவர பராமரிக்கப்படவில்லை என்று கூறி, அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டங்களை முன்னெடுப்போம் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் எச்சரித்துள்ளன. தமிழ்நாட்டில் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது பெற்ற பிள்ளைகளை விளையாட கூட அனுப்புவதற்கு பெற்றோர்கள் அஞ்சும் நிலையாக உள்ளது. இந்த சம்பவங்களை பார்க்கும்போது தமிழ்நாட்டில் தான் வாழுகிறோமா என்ற நிலை இருந்து வருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை மிக கடுமையானதாக இருக்கும் என கோபத்துடன் சினிமாவில் பேசுவதுபோல் வசனம் பேசும் முதல்வர் விஜய், தமிழகத்தில் அரங்கேறும் தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறார். தவெக அரசு, ரீல்ஸ் வாழ்க்கையை விட்டுவிட்டு ரியல் வாழ்க்கைக்கு எப்போது திரும்பும் என்ற கவலை தான் பொதுமக்களுக்கு தற்போது இருந்து வருகிறது.