ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்; தீயாய் ஆடி முசெட்டியைதீர்த்து கட்டிய அல்காரஸ்
டுரின்: இத்தாலியில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்று, இத்தாலி வீரர் லொரென்ஸோ முசெட்டியை, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் அபாரமாக வீழ்த்தினார். இத்தாலியில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆண்டின் இறுதியில் நடைபெறும் இப்போட்டிகள், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. ஒரு ஆண்டில் சிறப்பான வெற்றிகளை பெற்று முதல் 8 இடங்களை பெறும் வீரர்கள் இப்போட்டிகளில் மோதுவர்.
இந்நிலையில், ஜிம்மி கானர்ஸ் குரூப்பில், குரூப் ஸ்டேஜ் போட்டி ஒன்றில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலி வீரர் லொரென்ஸோ முசெட்டி உடன் மோதினார். துவக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அநாயாசமாக ஆடிய அவர், 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி வாகை சூடினார்.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் அமெரிக்க வீரர் டெய்லர் ஃப்ரிட்சை, ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார் வீழ்த்தியதை அடுத்து, அல்காரஸ் அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளார். தற்போது முசெட்டியை வீழ்த்தியதன் மூலம், ஜிம்மி கானர்ஸ் குரூப்பில் புள்ளிப் பட்டியலில் அல்காரஸ் முதலிடம் பிடித்துள்ளார். இன்று நடக்கும் அரை இறுதிப் போட்டி ஒன்றில் உலகின் 2ம் நிலை வீரர் ஜேனிக் சின்னர்- அலெக்ஸ் டிமினார் மோதுகின்றனர்.