Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆத்தூரில் பரபரப்பு சம்பவம் விஷம் குடித்து பிழைத்த பெண் தூக்கிட்டு தற்கொலை

* கடன் தொல்லையால் சோக முடிவு

* நிதி நிறுவன ஊழியர்கள் சிறைபிடிப்பு

நரசிங்கபுரம் : ஆத்தூர் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சிக்குள்ளான உறவினர்கள் நிதி நிறுவன ஊழியர்களை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வடக்குகாடு ஊத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மனைவி அம்பிகா(52). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்பிகா தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ரூ.38 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். மாதம் ரூ.2,850 வீதம் கட்ட வேண்டிய நிலையில், தவணை தவறியதால் நிதி நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனால், மன வேதனையடைந்த அம்பிகா இரண்டு மாதங்களுக்கு முன்பு விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து இரு தினங்களுக்கு முன்புதான் வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால், பணத்தை வசூல் செய்வதற்காக வழக்கம்போல் நிதி நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் 2 பேர் அம்பிகா வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால், அதிர்ச்சிக்குள்ளான உறவினர்கள், நீங்கள் கொடுத்த தொல்லையால்தான், அம்பிகா உயிரை மாய்த்துக்கொண்டார் எனக்கூறி நிதி நிறுவன ஊழியர்களை சிறைபிடித்தனர். மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், நிதிநிறுவன அதிகாரிகள் சம்பவ இடம் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அம்பிகா குடும்பத்திற்கு உதவுவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, ஊழியர்கள் இருவரையும் விடுவித்தனர். மேலும், அம்பிகா தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.