ஆதனூர்-மண்ணிவாக்கம் இடையே சாலையை விரிவாக்க வலியுறுத்தல்
கூடுவாஞ்சேரி: சென்னையிலிருந்து திருச்சி செல்லும் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில், ஊரப்பாக்கம் அருகே கடந்த 2023ம் ஆண்டு இறுதி முதல் ரூ.393.77 கோடி மதிப்பிலான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இப்பேருந்து நிலைய திறப்பு விழாவின்போது, கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை மேம்பாலம் வழியாக ஆதனூரில் இருந்து மண்ணிவாக்கம் கூட்ரோடு வரையிலான 5 கிமீ தூரமுள்ள சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் என்று அமைச்சர்கள் உறுதியளித்தனர். எனினும், இந்த சாலை விரிவாக்கப் பணி கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால் அந்த குறுகலான சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் தாம்பரத்தில் இருந்து மாடம்பாக்கம், ஒரத்தூர், நீலமங்கலம், ஆதனூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளும் இயக்குவதற்கு மறுக்கின்றனர். இப்பகுதிகளில் சரிவர பஸ் போக்குவரத்து இல்லாததால், அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நடுநிலைப் பள்ளியோடு படிப்பை நிறுத்துவதற்கு யோசிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆதனூரில் இருந்து மண்ணிவாக்கம் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆதனூர் ஊராட்சி தலைவர் உள்பட அப்பகுதி மக்கள் பலமுறை புகார் மனு அளித்தும், இப்பிரச்னை குறித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளை விரைவில் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.