பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களை வரவேற்பது போல் சுற்றி வந்த டால்ஃபின்கள்: இணையத்தில் வைரலாக வீடியோ!
அப்போது டிராகன் விண்கலத்தின் வெப்ப தடுப்பு ஓடுகள் உள்ளே இருந்த விண்வெளி வீரர்களை பாதுகாத்து பூமிக்கு அழைத்து வந்தது. இதனை நாசா விஞ்ஞானிகள் கொண்டாடினர். விண்கலம் சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக பாரசூட்கள் விரிக்கப்பட்டு வேகம் குறைக்கப்பட்டது. பின்னர் திட்டமிட்டப்படி சரியாக அதிகாலை 3.27 மணிக்கு ஃபுளோரிடா கடலில் டிராகன் விண்கலம் இறங்கி மிதந்தது. கடலில் படகுகளை தயார் நிலையில் வைத்திருந்த மீட்பு குழுவினர் விண்கலத்தை அங்கிருந்த கப்பலுக்கு இழுத்து சென்றனர். பின்னர் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விண்கலத்தை திறந்து விண்வெளி வீரர்களை ஒவ்வொருவராக மீட்டனர். மூன்றாவதாக அழைத்து வரப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் உற்சாகத்துடன் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தனார்.
சுனிதா பயணித்த விண்கலம் பாதுகாப்பான முறையில் நான்கு பாராசூட்கள் தாங்கி பிடிக்க பறவையின் இறகுபோல லேசாக தண்ணீரில் குதித்த போது அந்த நேரத்தில் இயற்கை அன்னையே சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றத்து போன்ற நிகழ்வு ஒன்றும் அரங்கேறியது. அப்போது விண்வெளி மங்கை சுனிதாவின் வரவை இயற்கையே வரவேற்பது போன்று கடலில் டிராகன் விண்கலத்தை சுற்றி டால்ஃபின்கள் வட்டமடித்தன. வீரர்களை கப்பலுக்கு கொண்டு செல்லும் வரை விண்கலத்தை டால்ஃபின்கள் தொடர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளிகள் இணையத்தில் வைரலாகிவரும் வேளையில் விண்வெளி வீரர்களை அவை வரவேற்றதாக சமூக ஊடகங்களில் இணையதளவாசிகள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.