அசாம் மாநிலத்தில் அரசியல் மோதல் பாகிஸ்தான் ஏஜெண்ட் கவுரவ் கோகாய்: முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளார். அங்கு அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடை பெற உள்ளது. ஆனால் இப்போதே அரசியலில் அனல் பறக்கிறது. அசாம் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் தருண் கோகய் மகனும், எம்பியுமான கவுரவ் கோகாயின் மனைவியான எலிசபெத் கார்ல்பென் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்.
அவருக்கும் பாகிஸ்தான் நபர் ஐஎஸ்ஐயுடன் தொடர்புடையவர் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் கவுரவ் கோகாய் ஒரு பாகிஸ்தான் ஏஜென்ட் என ஹிமந்தா சர்மா மீண்டும் தெரிவித்தார். இதனால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
* முதல்வராக இருக்க தகுதியில்லாதவர் கவுரவ் கோகாய் பதிலடி
கவுரவ் கோகாய் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், ‘கடந்த சில மாதங்களாக முதல்வர் சர்மா நம்பகத்தன்மையை இழந்து விட்டார். அசாம் பாடகர் ஜூபின் கார்க் கடைசியாக நடித்த ரோய் ரோய் பினாலே திரைப்படத்தை மாநில மக்கள் பார்த்து கொண்டிருந்த போது ஹிமந்தாவின் கருத்துக்கள் வந்துள்ளன. முதல்வரின் கருத்துக்கள் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்று அதிகரித்து வரும் அவரது பயத்தை காட்டுவதாக உள்ளன. அசாம் மாநில முதல்வராக இருக்க அவர் தகுதியற்றவர் என்பதற்கு இது இன்னும் ஒரு எடுத்துக்காட்டு’ என்றார்.
